பெரவள்ளூரில் கழிவுநீர் குளமாக மாறிய வண்ணான் குட்டை, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


பெரவள்ளூரில் கழிவுநீர் குளமாக மாறிய வண்ணான் குட்டை, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2018 3:00 AM IST (Updated: 7 Jun 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

பெரவள்ளூரில் கழிவுநீர் குளமாக மாறிய வண்ணான்குட்டையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை பெரவள்ளூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஜி.கே.எம்.காலனி, கருணாநிதி 9-வது தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவுநீர் குளம் உள்ளது. செங்குன்றம், ரெட்டேரி, கொளத்தூர் பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சென்டிரல், எழும்பூர், ஆவடி, தாம்பரம், வேளச்சேரி, மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு மின்சார ரெயிலில் செல்வோர் இந்த வழியாகத்தான் இந்த கழிவுநீர் குளத்தை கடந்து பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

பெரவள்ளுர் போலீஸ் நிலையம் அருகில் வந்தவுடன் இந்த கழிவுநீர் குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதை வைத்தே பெரவள்ளூர் வந்து விட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு இந்த குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

துர்நாற்றம் வீசும் இந்த கழிவுநீர் குளத்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த குளத்தை சுற்றி உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இங்கிருந்து ஏராளமான கொசுக்கள் உற்பத்தி ஆகி அருகில் உள்ள வீடுகளுக்குள் வந்து விடுவதால் கொசுக்கடியால் இரவு தூங்க முடியவில்லை எனவும், சாப்பிட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்கடியாலும், தேங்கி நிற்கும் கழிவுநீராலும் தங்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியை ராணுவத்தினருக்கும், சலவை தொழிலாளர்களுக்கும் குடிசை மாற்றுவாரியம் மூலம் வீட்டுமனைகளாக பிரித்து வழங்கப்பட்டது. அப்போது இங்கிருந்த சிறிய பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.

அந்த மழைநீரில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சலவை தொழிலாளர்கள், துணிகளை துவைத்து வந்தனர். அதனால் இந்த இடம் வண்ணான்குட்டை என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் அந்த குளத்தை சுற்றிலும் குடியிருப்புகள் வளர்ந்துவிட்டதால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் இந்த வண்ணான் குட்டையில் வந்து கலந்தன.

இதனால் சிறிய குட்டைபோல் காணப்பட்ட இந்த வண்ணான்குட்டை, சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளமாக விரிந்தது. தற்போது கழிவுநீர் அதிகளவில் கலந்துவிட்டதால் கழிவுநீர் குளமாகவே மாறிவிட்டது. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டும், செடிகள் வளர்ந்தும் குளத்து நீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது.

கழிவுநீராக மாறிவிட்ட இந்த குளத்தை சீரமைப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது குடிசைமாற்று வாரிய அதிகாரிகள்தான்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:-

இந்த குட்டையை சீரமைப்பது அல்லது கழிவுநீரை அகற்றுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடமும், கழிவுநீர் மற்றும் குடிசைமாற்றுவாரிய அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு அளித்தோம். ஆனால் அதிகாரிகள் ஒருவரை ஒருவர், மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

மாநகராட்சியில் கேட்டால் குடிசை மாற்று அதிகாரிகளிடம் கேட்குமாறும், அவர்களிடம் கேட்டால் கழிவுநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்குமாறும், அங்கு சென்று புகார் தெரிவித்தால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் முறையிடும்படி ஒவ்வொரு துறையாக கையை காட்டி பொதுமக்களை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர்.

குடிசைமாற்றுவாரிய அதிகாரிகள், குளத்தை முறையாக எங்களிடம் ஒப்படைத்தால் வண்ணான்குட்டையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். இது குறித்து வியாசர்பாடியில் உள்ள குடிசைமாற்றுவாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் சரியான பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.

எனவே மாநகராட்சி அதிகாரிகளோ, கழிவுநீர் வாரியமோ அல்லது குடிசை மாற்று வாரிய அதிகாரிகளோ யாராக இருந்தாலும் பொதுமக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இனியும் அலட்சியம் காட்டாமல் இந்த கழிவுநீர் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேலும் இந்த குளத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்காமலும், தற்போது உள்ள கழிவுநீரை அகற்றி, வண்ணான் குட்டையை சீரமைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில் மழைநீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படாமல் செய்யலாம். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story