மாற்று இடம் வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


மாற்று இடம் வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 7 Jun 2018 4:30 AM IST (Updated: 7 Jun 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

மாற்று இடம் வழங்கக்கோரி இருளர் இன மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி பகுதியை சேர்ந்த திரளான இருளர் இன மக்கள் திருவள்ளூர் மாவட்ட இருளர் முன்னேற்ற சங்க நிறுவனர் பிரபு தலைமையில் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் புகார் மனுவை அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி ஊராட்சியில் இருளர் இன மக்களாகிய நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இது நாள் வரையில் செய்து தரப்படவில்லை.

மழை காலங்களில் எங்கள் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. தற்போது நாங்கள் குடியிருக்கும் பகுதி நீர் நிலைப்பகுதி என்பதால் தண்ணீர் வருவதுடன் வி‌ஷப்பூச்சிகளும் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

இதனால் நாங்கள் பெரும் அச்சத்துடன் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த இடத்தை மாற்றி எங்கள் அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story