புதுச்சேரி அரசை முடக்க முயற்சியா? கவர்னர் விளக்கம் அளிக்க அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
புதுச்சேரி அரசை முடக்க முயற்சி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு கவர்னர் கிரண்பெடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
புச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவை சட்டமன்றத்தின் மாண்புகளையும், மரியாதையையும், ஜனநாயக நடைமுறைகளையும் போட்டிபோட்டுக்கொண்டு ஆளும் காங்கிரஸ் அரசும், கவர்னரும் காலில் போட்டு மிதித்து ஜனநாயக படுகொலை செய்கிறார்கள். பட்ஜெட்டுக்கான அனுமதியை காலத்தோடு வழங்காததால் சட்டமன்ற நடைமுறை கேள்விக்குறியாகி உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமலே சட்டமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. கவர்னர், முதல்–அமைச்சரின் தொடர் மெத்தனப்போக்கினால் புதுவை மாநில நிர்வாகத்தை முடக்கம் செய்ய இது ஒரு முதல்படியாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் அரசை முடக்க நினைக்கும் கவர்னரின் எண்ணம் பலிக்காது என்று பேசினார்.
பட்ஜெட்டிற்கு காலத்தோடு ஒப்புதல் பெறாதது தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளரின் பொறுப்பின்மையை காட்டுகிறது. அரசை முடக்க கவர்னர் நினைக்கிறார் என்ற குற்றச்சாட்டிற்கு கவர்னர் கிரண்பெடி உரிய பதிலை தெரிவிக்கவேண்டும்.
கடந்த காலங்களில் தமிழகத்தைவிட புதுச்சேரியில் பொருட்களுக்கு வரிகள் குறைவாக இருந்ததால் இது ஒரு கடத்தல் மாநிலமாக மாற்றப்பட்டிருந்தது. மதுபானம், பெட்ரோல், டீசல் கடத்தப்பட்டன. சில பொருட்களுக்கு குடோன்கள் இங்கு அமைக்கப்பட்டு கடைகளே இல்லாமல் விற்பனையானதாக கணக்கு காண்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் பயன்பெற்றனர்.
இப்போது மணல் கடத்தல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை சட்ட ரீதியாக முறைப்படுத்தாமல் உள்ளனர். புதுவை மக்களின் மணல் தேவையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக முதல்–அமைச்சர் நாராயணசாமி பக்கத்து மாநிலமான தமிழகத்துடன் இணக்கமாக செயல்படாமல் அரசியல் ரீதியான மோதல் போக்கினை கடைபிடித்து வருகிறார். தமிழக தலைவர்களை அவதூறாக சித்தரிப்பவர்களுக்கு ஆதரவாக புதுவை அரசு செயல்படுகிறது.
இப்போது வெளி நாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்போவதாக முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே துறைமுகம் செயல்பட கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. சரக்கு கப்பல் போக்குவரத்து எதுவும் நடக்கவில்லை. அப்படியிருக்க எப்படி மணலை இறக்குமதி செய்யப்போகிறார்கள்?
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.