ஐகோர்ட்டு உத்தரவுப்படி பிரேத பரிசோதனை நடந்தது: துப்பாக்கி சூட்டில் பலியான 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு


ஐகோர்ட்டு உத்தரவுப்படி பிரேத பரிசோதனை நடந்தது: துப்பாக்கி சூட்டில் பலியான 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 7 Jun 2018 5:15 AM IST (Updated: 7 Jun 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 6 பேரின் உடல்கள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தன.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த 7 பேரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமிருந்த ஜான்சி, ரஞ்சித்குமார், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், ஜெயராமன், கிளாஸ்டன் ஆகிய 6 பேரின் உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. இவர்களின் உடல்களை உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், ஜிப்மர், எய்ம்ஸ், திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் டாக்டர் தலைமையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு, புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரி டாக்டரை அனுப்புமாறு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர் வினோத் சவுத்ரி நேற்று காலையில் தூத்துக்குடிக்கு வந்தார். அவரது தலைமையில், டாக்டர்கள் மனோகரன், சுடலைமுத்து, சோமசுந்தரம், மும்மூர்த்தி ஆகியோர் பிரேத பரிசோதனை செய்வதற்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

டாக்டர் வினோத் சவுத்ரி தலைமையில் 2 டாக்டர்கள், ஒரு மாஜிஸ்திரேட்டு அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனை அறைக்கு சென்றனர். மாஜிஸ்திரேட்டுகள் தாவூது அம்மாள், பிஸ்மிதா, அண்ணாமலை, தினேஷ்குமார், சங்கர் ஆகியோரும் பிரேத பரிசோதனை அறைக்கு வந்தனர்.

காலை 10 மணிக்கு முதலில் தூத்துக்குடி தாமோதரன் நகரைச் சேர்ந்த மணிராஜின் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது. மதியம் 12.30 மணி அளவில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, மணிராஜின் உடலை அவருடைய அண்ணன் ஜெயகுமாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணிராஜின் உடல் அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு உறவினர்கள், பொதுமக்கள் மணிராஜின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிறிதுநேரத்தில் மணிராஜின் உடல் மையவாடிக்கு எடுத்து செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கிளாஸ்டனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மதியம் 2 மணியளவில் பிரேத பரிசோதனைக்குப்பின் கிளாஸ்டனின் உடல், அவருடைய தம்பி ஸ்டீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிளாஸ்டனின் உடலை அவரது வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கிளாஸ்டனின் உடலை அங்குள்ள லூர்து அன்னை ஆலயத்துக்கு எடுத்து சென்றனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மையவாடியில் கிளாஸ்டனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி புஷ்பாநகரை சேர்ந்த ரஞ்சித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது தந்தை பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அவரது உடல் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து திரேஸ்புரம் ஜான்சியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை மாலை 4.30 மணியளவில் முடிக்கப்பட்டு, அவருடைய மகன் பாவுல்ராஜிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அண்ணாநகர், ஸ்டேட் வங்கி காலனி வழியாக உடல் திரேஸ்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்து ஜான்சி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து உசிலம்பட்டி ஜெயராமன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது மனைவி பாலம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்பிறகு அந்தோணி செல்வராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை உறவினர்கள் வரவேண்டி இருப்பதால், இன்று (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்வதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் அவரது உடல் பாதுகாப்பாக பிண அறையில் வைக்கப்பட்டு உள்ளது.

ஒரே நாளில் 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதையொட்டி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அரசு ஆஸ்பத்திரியை சுற்றிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி நகர் பகுதியில் டி.ஐ.ஜி.க்கள் கபில்குமார் சரத்கர் (நெல்லை சரகம்), பிரதீப்குமார் (மதுரை), நிர்மல்குமார் ஜோஸ் (திண்டுக்கல்) ஆகியோர் தலைமையில் 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 20 துணை மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 23 கம்பெனி போலீசார் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 100 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

முன்னதாக, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து, பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடந்த சம்பவத்தில் 13 பேர் இறந்து உள்ளனர். இதில் ஏற்கனவே 7 பேரின் உடல்களை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மறுபிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்து உள்ளோம். மீதமுள்ள 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை இறந்த 8 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கும் விரைவில் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அப்போது, உதவி கலெக்டர் பிரசாந்த் உடன் இருந்தார்.

Next Story