ஸ்ரீவைகுண்டத்தில் காரில் சென்றபோது பயங்கரம்: நாட்டு வெடிகுண்டுகள் வீசி தொழில் அதிபரை கொல்ல முயற்சி
ஸ்ரீவைகுண்டத்தில் காரில் சென்ற தொழில் அதிபரை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்ற மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் சிவராமன் என்ற ராஜா (வயது 39). தொழில் அதிபர். இவருக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் என்ற ஊரில் 350 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக, அதே ஊரை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய செயலாளரான வைகுண்டம் கூறி வருகிறார். இதனால் சிவராமனுக்கும், வைகுண்டத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று சிவராமனுக்கு சொந்தமான இடத்தில் வைகுண்டம் ஆதரவாளர்கள் வாகனத்தில் செம்மண் அள்ளிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவராமன் வீட்டில் இருந்து காரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்துக்கு புகார் செய்வதற்காக புறப்பட்டு சென்றார். அவருடன், உறவினரான அதே ஊரை சேர்ந்த ராமசாமி மகன் நல்லமாடன் (32) சென்றார்.
வைகுண்டம் தரப்பினர் அத்துமீறி தனது இடத்தில் செம்மண் அள்ளுவதாக போலீஸ் நிலையத்தில் சிவராமன் புகார் செய்தார். பின்னர் அவர் உறவினர் நல்லமாடனுடன் அங்கிருந்து காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மாலை 4 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் மேடை பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது, ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென சிவராமனின் காரை வழிமறித்து நிறுத்தினர். கண் இமைக்கும் நேரத்தில் அவருடைய கார் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் 2 குண்டுகள் காரில் பட்டு வெடித்தன. ஒரு குண்டு வெடிக்காமல் சாலையில் விழுந்தது. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக இருந்தது.
இதனால் நிலைகுலைந்த சிவராமனும், நல்லமாடனும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால், மர்மகும்பல் சிவராமனை துரத்தி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருடைய தலை, கழுத்து, கை, உடலில் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட ஓடிய அவரை காப்பாற்றுவதற்காக உறவினர் நல்லமாடன் முயன்றார். அவரையும் மர்மகும்பல் அரிவாளால் வெட்டி விட்டு கார், மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
சிறிது நேரத்தில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் உருவானது. அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவராமன் உள்பட 2 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் கிடந்த வெடிக்காத நாட்டு வெடிகுண்டையும் போலீசார் கைப்பற்றி செயல் இழக்க செய்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், முன்விரோதத்தில் தி.மு.க. பிரமுகர் வைகுண்டம் ஆதரவாளர்கள் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story