தென்மேற்கு பருவமழை: வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


தென்மேற்கு பருவமழை: வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2018 4:00 AM IST (Updated: 7 Jun 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.

தூத்துக்குடி, 

நடப்பு மாதமான ஜூன் மற்றும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்கின்ற காலங்களாகும். இந்த பருவமழையின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளதடுப்புப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;-

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் அனைத்தும், அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய்துறை அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தடையின்றி கிடைத்திட, அந்தந்த பகுதிகளில் உள்ள நுகர்பொருள் கிட்டங்கிகளில் தேவையான அளவு உணவு இருப்பு இருப்பதை நுகர்பொருள் வழங்கு துறை அலுவலர்கள் உறுதி செய்திடவேண்டும்.

பள்ளிக்கூட கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு இடங்கள் போன்ற பொது கட்டிடங்களை உடனடியாக ஆய்வு செய்து புயல், கடும் மழை ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோரை குடியமர்த்த தகுதி படைத்ததாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்திட வேண்டும். மேலும், அந்த கட்டிடங்களில் அடிப்படை வசதிகளான மின்வசதி, தண்ணீர் வசதி உள்ளதா? என்பதை ஆய்வு செய்து, பழுதுகள் இருப்பின் உடனடியாக சரிசெய்து, தயார் நிலையில் வைத்துக்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

குளங்கள் அனைத்தையும் பார்வையிட்டு பலவீனமாக உள்ள கரைகளை சீரமைக்க வேண்டும். மதகுகளில் பழுது ஏதும் இருப்பின் சரிசெய்து, இயங்கும் வகையில் இருக்கவேண்டும். வெள்ள நீர் வடிந்து செல்லும் ஓடைகள் மற்றும் வாய்க்கால்களில் தடையின்றி நீர் செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளவேண்டும். சாலைகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களில் நீர் தடையின்றி செல்வதை உறுதி செய்து, மேற்படி பாலத்திலிருந்து 1,000 மீட்டர் நீளத்திற்கு இருபுறங்களிலும் தூர்வாரி வேறு ஏதும் தடங்கல்கள் இல்லாதவாறு வைத்திருக்க வேண்டும்.

சுகாதாரத்துறை அலுவலர்கள் தேவையான நோய் எதிர்ப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட உள்ளாட்சித்துறை அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீயணைப்புத்துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மீட்பு படகு உள்ளிட்ட பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். தென்மேற்கு பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பொதுமக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் உள்ளிட்ட அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story