சேலம் அருகே நரியை வைத்து பரிகார பூஜை செய்த பூசாரிக்கு வலைவீச்சு


சேலம் அருகே நரியை வைத்து பரிகார பூஜை செய்த பூசாரிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jun 2018 4:00 AM IST (Updated: 7 Jun 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே நரியை வைத்து பரிகார பூஜை செய்த பூசாரியை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம் அருகே அரியானூர் பக்கமுள்ளது கஞ்சமலை கருங்காலி. இந்த பகுதியில் கோவில் பூசாரி ஒருவர் நரியை பிடித்து கூண்டில் அடைத்து வளர்த்து வருவதாக மாவட்ட வன அலுவலர் பெரியசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தெற்கு வனச்சரகர் சுப்பிரமணி தலைமையில் வனவர் பன்னீர்செல்வம் மற்றும் வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு நரி வளர்க்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நரியை வனத்துறையினர் மீட்டு தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், நரியை வளர்த்து வந்தது கருங்காலி பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி சந்திரபிரகாசம் என்பது தெரியவந்தது. அவருடைய வீட்டில் ராகு, கேது பூஜைகள் செய்யப்படும் என எழுதி வைத்து நரியை வைத்து பரிகார பூஜைசெய்து வந்ததை கண்டுபிடித்தனர்.

பூசாரிக்கு வலைவீச்சு

இதையடுத்து அவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலை மறைவாக உள்ள சந்திரபிரகாசத்தை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட நரியை குரும்பப்பட்டி வன உயிரின பூங்காவில் விட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story