கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு ‘காலா’ படத்துக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் வினியோகஸ்தர் அலுவலகம் சூறை


கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு ‘காலா’ படத்துக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் வினியோகஸ்தர் அலுவலகம் சூறை
x
தினத்தந்தி 7 Jun 2018 4:00 AM IST (Updated: 7 Jun 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்தின் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள காலா வினியோகஸ்தர் அலுவலகத்தை கன்னட அமைப்பினர் சூறையாடினார்கள்.

பெங்களூரு, 

ரஜினிகாந்தின் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள காலா வினியோகஸ்தர் அலுவலகத்தை கன்னட அமைப்பினர் சூறையாடினார்கள். ரஜினி போஸ்டர்களையும் கிழித்து எறிந்தனர்.

ரஜினியின் காலா

ரஜினியின் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. காலா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கன்னடர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் காலாவை திரையிட தியேட்டர் அதிபர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் காலாவை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தி உள்ளது. வாட்டாள் நாகராஜும் தியேட்டர் அதிபர்களை எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் கர்நாடகத்தில் காலா படத்தின் வினியோக உரிமை பெற்றுள்ள கனகபுர சீனிவாஸ் தடையை மீறி 130 தியேட்டர்களில் காலா படத்தை திரையிடப்போவதாக அறிவித்தார்.

அலுவலகம் சூறை

பெங்களூருவில் உள்ள சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் காலாவை திரையிட முன்வந்தன. இதனால் கர்நாடகத்தில் 150 தியேட்டர்களில் காலா படம் இன்று(வியாழக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கன்னட அமைப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெங்களூரு காந்திநகரில் உள்ள காலா பட வினியோகஸ்தர் அலுவலகத்தின் முன்பு கன்னட அமைப்பினர் ஒன்று திரண்டு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் வினியோகஸ்தர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

மேலும் அலுவலகத்திற்கு வெளியே இருந்த தஸ்தாவேஜுகளையும், ரஜினி பட போஸ்டர்களையும் கிழித்து எறிந்தனர். நாற்காலிகளையும் வெளியே தூக்கி வீசினார்கள். கர்நாடகம் முழுவதும் எந்த தியேட்டரிலும் காலாவை திரையிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து கோஷங்களும் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story