சிவசேனாவுடன் உறவை மேம்படுத்த பா.ஜனதா நடவடிக்கை உத்தவ்தாக்கரேவுடன் அமித் ஷா சந்திப்பு


சிவசேனாவுடன் உறவை மேம்படுத்த பா.ஜனதா நடவடிக்கை உத்தவ்தாக்கரேவுடன் அமித் ஷா சந்திப்பு
x
தினத்தந்தி 7 Jun 2018 4:45 AM IST (Updated: 7 Jun 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நீண்ட காலத்துக்கு கூட்டணியில் இருந்த சிவசேனா மற்றும் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்தனியாக சந்தித்தன.

மும்பை, 

மராட்டியத்தில் நீண்ட காலத்துக்கு கூட்டணியில் இருந்த சிவசேனா மற்றும் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்தனியாக சந்தித்தன.

சிவசேனா விமர்சனம்

இந்த தேர்தலில் எந்தகட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பா.ஜனதா மற்றும் சிவசேனா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றின. பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தாலும், நானார் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டம், பெட்ரோல் விலை உயர்வு உள்பட பல்வேறு விவகாரங்களில் சிவசேனா கட்சி வெளிப்படையாகவே பா.ஜனதாவை விமர்சித்தது. குறிப்பாக பிரதமர் மோடி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பா.ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோரை சிவசேனா கடுமையாக விமர்சித்து வந்தது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே அவ்வபோது உரசல்கள் ஏற்பட்டு மாநில அரசியல் பரபரப்பாக காணப்பட்டது.

பால்கர் இடைத்தேர்தல்

இந்தநிலையில் பால்கர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜனதாவும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டன. தேர்தல் பிரசாரத்தின்போது இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர்.

சிவசேனா கட்சி தங்களது முதுகில் குத்திவிட்டதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து தேர்தல் பிரசாரத்தின்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் பா.ஜனதா வேட்பாளர் ராஜேந்திர காவித் 29 ஆயிரத்து 572 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளர் சீனிவாஸ் வாங்காவை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதையடுத்து இரு கட்சிக்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்தது.

தனித்து போட்டி

தேர்தல் முடிவை தொடர்ந்து பா.ஜனதா தான் தனது மிகப்பெரிய அரசியல் எதிரி என அறிவித்து சிவசேனா பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும், இனிமேல் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவது இல்லை எனவும் அக்கட்சி தெரிவித்தது.

ஆனால் சிவசேனா-பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்தால் அது காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இதனால் சிவசேனாவை கூட்டணியில் தொடருமாறு பா.ஜனதா தலைவர்கள் பலர் வலியுறுத்தினர். பா.ஜனதாவின் 4 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, சிவசேனா தொடர்ந்து தங்களுடனான(பா.ஜனதா) கூட்டணியில் நீடிப்பதையே தான் விரும்புவதாக தெரிவித்தார்.

இதுபோல் சிவசேனா உடனான உறவை புதுப்பித்து கூட்டணியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யுமாறு கட்சி நிர்வாகிகளை முதல்-மந்திரி பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார். ஆனால் அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டப்போவதாக சிவசேனா தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

அமித் ஷா வருகை

இதற்கிடையே கடந்த மாதம் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடாக பா.ஜனதா தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். மேலும் பா.ஜனதாவின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கிக்கூறும் பிரசாரமும் அக்கட்சி சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன்படி கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேயை அமித் ஷா சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மாநிலத்தில் இரு கட்சிகளுக்குமான உறவில் நாளுக்குநாள் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் அமித் ஷா-உத்தவ் தாக்கரே சந்திப்பு குறித்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று மும்பை வந்தடைந்த அமித் ஷா, இந்தி நடிகை மாதுரி தீக்‌ஷித், தொழில் அதிபர் ரத்தன் டாடா உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பா.ஜனதாவின் 4 ஆண்டுகால சாதனைகள் குறித்த கையேடுகளை வழங்கினார்.

முதல்-மந்திரியுடன் ஆலோசிக்க மறுப்பு?

இதையடுத்து நேற்று மாலை மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தில் அவரை அமித் ஷா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

அப்போது பா.ஜனதா கட்சியின் 4 ஆண்டுகால சாதனைகள் குறித்து அமித் ஷா உத்தவ் தாக்கரேயிடம் விளக்கிக் கூறினார். இதையடுத்து வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே கூட்டணி குறித்த ஆலோசனையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்பதற்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பின்னர் அவர் பங்கு பெறாமலேயே அமித் ஷா மற்றும் உத்தவ் தாக்கரே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

பா.ஜனதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகையில் உத்தவ் தாக்கரேவுடனான அமித் ஷாவின் சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story