கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் காவல்துறை இயக்குனர் ஆய்வு


கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் கூடுதல் காவல்துறை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jun 2018 4:45 AM IST (Updated: 8 Jun 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே இருப்புபாதைக்கான கூடுதல் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

கும்மிடிப்பூண்டி,

சென்னை-சென்டிரல் கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் ரெயில் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் துறை சார்ந்த ஆய்வுக்காக ரெயில்வே இருப்புபாதைக்கான கூடுதல் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு நேரில் வந்தார். அவரை கும்மிடிப்பூண்டி ரெயில் பயணிகள் அமைப்பின் நிர்வாகிகள் ராஜா, சண்முகம், தினேஷ், மோகன் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் ரெயில் பயண பாதுகாப்பு குறித்தும், அதில் ஏதேனும் குறைகள் உள்ளதா? என்றும் சைலேந்திரபாபு கேட்டறிந்தார்.

அப்போது பயணிகளுக்கு இடையூறாக மின்சார ரெயில்களில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்திட வேண்டும். இரவு நேர ரெயில் பயணத்தின்போது பெண்களிடம் இருந்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், கும்மிடிப்பூண்டி ரெயில்வே நடைமேடையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவது இல்லை என்றும் அவரிடம் ரெயில் பயணிகள் புகார் கூறினர்.

இது தொடர்பாக முறையாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே இருப்புபாதைக்கான கூடுதல் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.

முன்னதாக கூடுதல் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதாகவும் அதனை தடுக்க போலீஸ்நிலையம் அமைத்து போதிய போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும் ரெயில் பயணிகள் சங்கத்தலைவர் தீனதயாளன் தெரிவித்தார். மேலும் ரெயில்களில் சூதாட்டம் நடைபெறுவதாகவும், திருநங்கைகளின் தொந்தரவு அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

Next Story