மாவட்ட செய்திகள்

இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதி + "||" + The destroyed Building waste is concentrated Civilians are suffering

இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதி

இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதி
ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின்போது இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக அவற்றை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி பாலம் முதல் அயனாவரம் சிக்னல் வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 153 வீடுகளும், கடந்த மே மாதம் 27-ந்தேதி 315 வீடுகளும் சென்னை மாநகராட்சி சார்பில் இடித்து அகற்றப்பட்டன. இங்கு வசித்து வந்தவர்களுக்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டது.


மேலும் அயனாவரம் சிக்னல் அருகேயும் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த 19 அடுக்குமாடி வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.

இவ்வாறு இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் அங்கேயே குவிந்து கிடக்கின்றன. சாலையோரமும், குடியிருப்புகள் அருகேயும் கட்டிட கழிவுகள் அப்படியே குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

அயனாவரம், வெங்கடேசபுரம் பஸ் நிறுத்தத்தில் கட்டிட இடிபாடு கழிவுகள் இருப்பதால் பயணிகள் இடிபாடுகளுக்கு இடையே சாலையில் நிற்கின்றனர். இடிபாடுகளில் உள்ள இரும்பு கம்பிகள் ஆங்காங்கே நீட்டிக்கொண்டு இருக்கிறது. காற்றில் கட்டிட கழிவுகளில் உள்ள மண் தூசிகள் பறந்து வந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால் அவர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது.

நடைபாதைகளில் கட்டிட கழிவுகள் குவிந்து இருப்பதால் பொதுமக்கள் சாலையில் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகனங்கள் மோதி விடுமோ? என்ற அச்சத்துடன் சாலையில் நடந்து செல்ல வேண்டியது இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது.

சாலையோரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டிட கழிவுகள் பெரும் மலை போல் குவிந்து இருக்கிறது. சிறுவர்கள் இதில் ஏறி விளையாடுகின்றனர். அந்த கட்டிட கழிவுகளில் நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பிகள் கை, கால்களை கிழித்து காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் ஒன்றும் அறியாத சிறுவர்கள் தொடர்ந்து இதுபோல் விளையாடி வருவது எங்களுக்கு பயமாக உள்ளது.

சுமார் 500 குடிசை வீடுகளை அவசர அவசரமாக அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள், கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச்சென்றது ஏன்? என்று தெரியவில்லை.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், தற்போது நிதி இல்லாததால் 2 மாதங்கள் கழித்து இந்த கட்டிட கழிவுகள் அகற்றப்படும். தேவைப்பட்டால் அவரவர் வீட்டு முன் இருக்கும் கட்டிட கழிவுகளை அவர்களே அகற்றி கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “மிகப்பெரிய குவியலாக உள்ள இந்த கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த 4 அல்லது 5 நாட்களில் இந்த கட்டிட கழிவுகள் நிச்சயம் அகற்றப்படும்” என்றனர்.

இதற்கிடையில் சில மர்மநபர்கள், இந்த கட்டிட இடிபாடுகளில் உள்ள கம்பிகளை திருட்டுத்தனமாக அறுத்து எடுத்துச்சென்று விற்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்ற நேரங்களில் சில சமயம் கட்டிட கழிவுகள் சரிந்து விழுந்து, அதில் சிக்கி உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இதுபோன்ற விபரீத சம்பவங்கள் ஏற்படும் முன்பாக, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள இந்த கட்டிட இடிபாடுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.