காங்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி ஆபரேட்டரின் கை சிதைந்தது தீவிர சிகிச்சை


காங்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி ஆபரேட்டரின் கை சிதைந்தது தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 8 Jun 2018 4:30 AM IST (Updated: 8 Jun 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே காங்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கிய ஆபரேட்டரின் கை சிதைந்து போனது. 3 மணிநேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நித்திரவிளை,


நித்திரவிளை அருகே நடைக்காவு சந்திப்பு பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது. நேற்று வீட்டிற்கு காங்கிரீட் பெல்ட் போடும் பணி நடைபெற்றது.

இதற்காக காங்கிரீட் எந்திரம் மூலம் பணிகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. கலவை எந்திர ஆபரேட்டராக முன்சிறை அருகே குன்னத்தூர் காசிபொற்றை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 25) என்ற வாலிபர் இருந்தார்.

இந்தநிலையில் பிற்பகல் 3 மணியளவில் காங்கரீட் கலவை பணிகள் முடியும் தருவாயில் இருந்தது. இதனால் சுந்தர்ராஜ் எந்திரத்தை இயங்க விட்டு அதன் வெளிப்புற பகுதியை சிமெண்டு சாக்கினால் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று சாக்கு எந்திரத்தின் பற்சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. உடனே சுந்தர்ராஜ் சாக்கை எடுக்க முயன்றார். அதற்குள் எந்திரம் இயங்கியதால் சுந்தர்ராஜை உள்ளே இழுத்தது. எந்திரத்தில் சிக்கிய அவர் அலறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவருடைய இடது கை முழுவதும் பற்சக்கரத்தில் சிக்கி கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு உடனிருந்த பணியாளர்கள் மற்றும் அப்பகுதியில் நின்றவர்கள் விரைந்து வந்து மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. எந்திரத்தில் கை சிக்கிய நிலையில் சுந்தர்ராஜ் உயிருக்காக போராடினார்.

உடனே இதுபற்றி கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், குழித்துறை, நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிக்காக கிரேனும் வரவழைக்கப்பட்டது. மேலும், 108 ஆம்புலன்சு மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. நடைக்காவு முக்கிய வணிக சந்திப்பு பகுதியில் இச்சம்பவம் நடந்ததால் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பற்சக்கரத்தில் சிக்கி கை சிதைந்த நிலையில் சுந்தர்ராஜை மீட்டனர்.

உடனே அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்சு ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் சுந்தர் ராஜை மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காங்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி ஆபரேட்டரின் கை சிதைந்து போன சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story