மாவட்ட செய்திகள்

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த 8-ம் வகுப்பு மாணவி சாவு + "||" + The school fell into the campus Class VI student death

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த 8-ம் வகுப்பு மாணவி சாவு

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த 8-ம் வகுப்பு மாணவி சாவு
விருத்தாசலம் அருகே பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த 8-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார். சிகிச்சைக்கு சேர்த்த போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் தான் அவர் உயிரிழந்ததாக கூறி மாணவர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
கம்மாபுரம்,

விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள சு.கீணனூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 45). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுக்கு நிர்மலா(15), மகாலட்சுமி(13) என்ற 2 மகள்களும், கமலக் கண்ணன்(11) என்ற மகனும் உள்ளனர்.


இவர்களில் மகாலட்சுமி கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளி வளாகத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பணியில் இல்லை.

இதையடுத்து அங்கிருந்த செவிலியர்கள், அந்த மாணவியை பரிசோதனை செய்தனர். அப்போது அந்த மாணவி இறந்துவிட்டதாக அவர்கள் கூறினர். இதில் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் மகாலட்சுமியின் தாய் மற்றும் உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பதறி அடித்துக் கொண்டு வந்தனர். அங்கு மகாலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரை வைப்பதாக இருந்தது.

இந்த நிலையில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் தான் மகாலட்சுமி இறந்துவிட்டதாக கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் மற்றும் விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மாணவி எதனால் மயங்கி விழுந்து இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.