நாளை முதல் 3 நாட்கள் மும்பையில் கனமழை எச்சரிக்கை தயார் நிலையில் மாநகராட்சி; அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து
மும்பை மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாநகராட்சி முன்னேற் பாடுகளை செய்துள்ளது.
மும்பை,
மும்பை மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாநகராட்சி முன்னேற் பாடுகளை செய்துள்ளது.
மராட்டியத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலம் பருவமழை காலம் ஆகும்.
ஆண்டுதோறும் சவாலான பணி
மாநில தலைநகரான மும்பைக்கு ஆண்டுதோறும் பருவமழையை சமாளிப்பது என்பது சவாலாக இருந்து வருகிறது. நகரை வெள்ளம் சூழாமல் தடுப்பதற்காக மழைக்கு முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு பருவமழை தொடங்க உள்ளது. தற்போது பருவமழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது. மும்பை நகரில் நேற்று பெய்த மழைக்கே பல சாலைகளில் வெள்ளம் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாக்கடை கால்வாய்கள் தூர்வாரும் பணி திறம்பட செய்யப்படாததே இந்த அவல நிலைக்கு காரணம் என மும்பைவாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மிக கனமழை
இந்தநிலையில், நாளை(சனிக்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரை 3 நாட்கள் ரத்னகிரி, சிந்துதுர்க், மும்பை, தானே, ராய்காட், பால்கர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மிக கனமழை பெய்யும் பட்சத்தில் மும்பை நகரில் பெரியளவில் வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
எனவே கனமழையை எதிர் கொள்வதற்கு மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.
அதிகாரிகளின் விடுமுறை ரத்து
மும்பையில் வெள்ளம் சூழ்ந்து விடாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி முடுக்கிவிட்டு உள்ளது.
மாநகராட்சி துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் என மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் அனைவரது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த 2 நாட்களும் அதிகாரிகள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
மீட்பு பணியில்...
கிழக்கு புறநகரில் வெள்ளம் சூழும் பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ள பரேல், மான்கூர்டு, மேற்கு புறநகரில் அந்தேரி ஆகிய இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வாக்கி-டாக்கி மற்றும் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார்நிலையில் நிறுத்தப் படுகின்றனர்.
தேவைப்படும் பட்சத்தில் கொலபா, ஒர்லி, காட்கோபர், டிராம்பே, மலாடு உள்ளிட்ட இடங்களில் கடற்படையினர் வெள்ள மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதேபோல தீயணைப்பு துறையின் வெள்ள மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். போலீஸ், போக்குவரத்து போலீஸ், கல்வித்துறை அதிகாரிகள், பெஸ்ட் அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். வெள்ள நீரை மோட்டார்பம்புகள் மூலம் துரிதமாக வெளி யேற்றுவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story