மனித வாழ்வோடு இணைந்த பொம்மைகள்...!


மனித வாழ்வோடு இணைந்த பொம்மைகள்...!
x
தினத்தந்தி 8 Jun 2018 11:03 AM IST (Updated: 8 Jun 2018 11:03 AM IST)
t-max-icont-min-icon

நாளை(ஜூன் 9-ந்தேதி) உலக பொம்மைகள் தினம்

நீயும் பொம்மை நானும் பொம்மை, நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை என்றும் கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை என மனிதர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்து இருப்பவை பொம்மைகள். பொம்மை என்பது குறியீடு. இது கார் முதல் கரப்பான் பூச்சி வரை அனைத்தையும் பல்வேறு வடிவில் பல்வேறு பொருள்களால் செய்யப்பட்டு அனைத்து வீடுகளிலும் நிறைந்திருக்கிறது. உலகத்திலேயே அதிக அளவு விற்பனையாகும் லெகோ, பார்பி பொம்மைகள் வரை வேறு வேறு கால கட்டத்தில் வேறு வேறு முறைகளில் நாம் உபயோகிக்கிறோம். குழந்தைகள் மட்டுமல்ல மேஜிக், சமய சடங்குகள், கல்வியின் செய்முறை விளக்கம், மாதிரி உருவாக்கம் என அனைத்திற்கும் பொம்மைகள் உபயோகிக்கிறோம்.

இந்த பொம்மையின் வரலாறு 5300 வருட பாரம்பரியதுடன் நம்மை ஆச்சர்யப்படவைக்கும். சிந்து சமவெளி நாகரிகத்தில் கல் மற்றும் வைக்கோல் போன்ற இயற்கைப் பொருட்களால் பொம்மை உருவாக்கப்பட்டது. எகிப்து, கிரேக்கம் போன்ற நாடுகளில் பல்வேறு பொருட்களால் பொம்மைகள் செய்யப்பட்டன. குதிரை, பறவை பொம்மைகளை முதலில் வடிவமைத்தனர். கி.மு.1990, 2080 களில் கல், களிமண், மரம், தந்தம், தோல், மெழுகு என பொருட் களில் பொம்மையை செய்தனர். கி.மு.200 களிலேயே கை, கால் முட்டி இணைப்புகளை அசைக்கும் வண்ணம், அணியும் உடைகளை பொம்மைக்கு மாற்றும் வண்ணம் தயாரித்தனர்.

இன்றைய பார்பி பொம்மைக்கு அடித்தளம் அப்போதே உருவாக்கப்பட்டது என்றால் மிகையாகாது. கிரேக்கத்தில் அசைக்கும் இடுப்புகளுடன் பொம்மையை வளைக்கும் வண்ணம் உருவாக்கினார். இன்றைய கரடி பொம்மையின் பின்னணி இதுவாக இருக்கலாம். 13-ம் நூற்றாண்டில் ஜெர்மனியிலும், 15-ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும், 17-ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் இதற்கென நிறுவனங்களை அமைத்தனர். செராமிக்பிளாஸ்டிக்கில் பொம்மைகள் தயார்செய்யப்பட்டது. . அதுவரை தனிப்பட்ட முறையில் உருவாக்கி கொண்டிருந்த பொம்மைகளை 1900 களில் பெருமளவு உற்பத்தி செய்து வணிகப் பொருளாக்கியது.

இந்தியாவில் புரட்டாசி மாத நவராத்திரி திருவிழாவில் கோவில்களிலும்,வீடுகளிலும் பொம்மைகளை வைத்து கொலு வைக்கும் பழக்கம் உள்ளது. அதில் 9 படிகளில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியை சித்தரிக்கும் வகையில் ஓரறிவு முதல் 6 அறிவு வரை உள்ள பொம்மைகளை 6 படிகளிலும் 7,8,9 படிகளில் தேவர்கள், ரிஷிகள் மற்றும் இறைவனின் பல்வேறு வடிவங்கள்,தசாவதார கதை சொல்லும் கொலு பொம்மைகள் இடம் பெறும்.சுதந்திர போராட்டத்தில் தோல் பாவை கூத்து என்பது பெரும்பங்கு வகித்தது. சமய திருவிழாக்களில் புராணங்களை அடுத்த தலை முறைக்கு எடுத்து சென்றதும் இந்த பொம்மைகள்.

பொம்மைகளை குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் நிறம், அது வெளிப்படுத்தும் சப்தம், அதன் தன்மையை வைத்து அவர்களின் மனோ நிலையை அறிய முடியும் என குழந்தை உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த பொம்மைகள் பெரியவர்களை குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ளவும் அவர்களோடு நம்மை இணைக்கவும் பாலமாக உள்ளது.

ஒரு உளவியல் புள்ளியியல் ஆய்வின் முடிவின்படி மேல் தட்டு நிலையில் இருக்கும் பிள்ளைகள் பொம்மைகள் மேல் மிகவும் சொந்தம் கொண்டாடும் தன்மையுடன் இருப்பதாகவும் கீழ் தட்டில் இருக்கும் பிள்ளைகள் பிறரிடம் பகிர்ந்து விளையாடுவதாகவும் பதிவு செய்கிறது.

பொம்மைகள் பிள்ளைகளின் கை, கண் மூளை சேர்ந்து வேலை செய்ய உதவுவதாகவும் கணக்கு மற்றும் அறிவியல் தகுதியை வளர்க்க உதவுவதாகவும் நிரூபித்துள்ளனர்.

1960-70க்கு மேல் தான் பொம்மைகளை பெண் குழந்தைகளுக்கு தனியாகவும், ஆண் குழந்தைகளுக்கு தனியாகவும் என குறிப்பிட்டு உருவாக்க ஆரம்பித்தனர்.

இன்றைய காலச்சூழலில் தனிமையில் வளரும் பிள்ளைகளுக்கு பொம்மைகள்தான் தோழி, ஆசிரியர், என அனைத்துமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. குதிரையில் ஆரம்பித்த பொம்மை இன்று நம் சிந்தனைகளுக்கு தகுந்தாற்போல் மிருகங்களின் பொம்மைகள் அது எழுப்பும் சப்தத்துடனும் நாம் பேசினால் நம்மிடம் பேசும்படியாகவும் வாகனங்கள் கட்டிடங்களை அமைக்கும் வகையிலும் உருவாக்கும் சீரிய இடத்தை எட்டியுள்ளது.

இன்று பொம்மைகள் தயாரிப்பு மிகப் பெரிய வணிகமாக உள்ளது. நாம் என்று மேற்கத்திய கலாசாரமான பிறந்தநாள் கொண்டாடும் பழக்கத்தை உருவாக்கினோமோ அன்றே இந்த வணிகம் விரிவடைய ஆரம்பித்துவிட்டது. இன்று ‘யூ டியூப்’ எனப்படும் வலை தளத்தில் ரேயான் என்னும் 6 வயது சிறுமி பொம்மை பற்றிய விமர்சனங்களை பதிவிட்டு 11 மில்லியன் டாலர் சம்பாதிப்பதாக போபர்ஸ் இதழ் 2017ல் வெளியிட்டது. ‘ஸ்டாகேசர்கட்டி’ எனும் பொம்மை முதலில் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி விண்வெளி வரை பொம்மையின் பயணம் தொடர்கிறது.

பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் உலகத்தை புரியவைக்க, ஆசிரியர்களுக்கு, மருத்துவர்களுக்கு குழந்தைகளின் எண்ணப்போக்கை பிரதிபலிக்க வைக்க, பிள்ளைகளுக்கு அவர்களின் உலகத்தில் அவர்களோடு பயணிக்கும் சக உயிராக உற்ற தோழமையாக மனித வரலாற்றின் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணமாக மனித வாழ்வோடு இணைந்த பொம்மைகளோடு நாமும் பொம்மைகள் தினத்தை கொண்டாடுவோம். 

- பேராசிரியை ஆர்.காயத்ரி

Next Story