மாவட்ட செய்திகள்

கோபுரத்தை புனரமைக்க சாரம் அமைக்கும் பணி தொடங்கியது + "||" + Tower The reconstruction work has begun

கோபுரத்தை புனரமைக்க சாரம் அமைக்கும் பணி தொடங்கியது

கோபுரத்தை புனரமைக்க சாரம் அமைக்கும் பணி தொடங்கியது
தஞ்சை பெரிய கோவிலில் மின்னல் தாக்கியதில் சேதம் அடைந்த கோபுரத்தை புனரமைக்க சாரம் அமைக்கும் பணி தொடங்கியது.
தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில், ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து இருக்கிறது. தனித்துவமான கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலின் முகப்பில் கேரளாந்தகன் கோபுரமும், அடுத்ததாக ராஜராஜன் கோபுரமும் உள்ளது. பெருவுடையார் சன்னதிக்கு மேல் பகுதியில் 216 அடி உயர கோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.


கோவிலின் முகப்பில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தின் முதல் தளம் தவிர மற்றவை சிறப்பான தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி தஞ்சையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கீர்த்தி முகத்தில் இருக்கும் சிற்பம் உடைந்து சேதம் அடைந்தது.

3-வது முறையாக மின்னல் தாக்கியதில் கோபுரத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து தொல்லியல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கோபுரத்திற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து சேதம் அடைந்த சிற்பத்தை பழமை மாறாமல் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் புனரமைக்கும் பணிக்காக சாரம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

90 அடி உயரத்திற்கு இரும்பு கம்பிகளால் ஆன சாரம் அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சாரம் அமைக்கப்பட்டவுடன் சிற்பத்தை புனரமைக்கும் பணி நடைபெறும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.