பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 9 Jun 2018 4:15 AM IST (Updated: 9 Jun 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை மருத்துவ குணம் கொண்ட பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பொறையாறு,

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் பண்டைய காலத்தில் இருந்து பனை மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. இந்த பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனங்கிழங்கு போன்றவை உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.

மேலும், பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இவைகள் உடலுக்கு வலு சேர்த்து நீண்ட ஆயுளை தரும். நம் முன்னோர்கள் பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை சாப்பிட்டு திடகாத்திரமாக இருந்து உள்ளனர்.

நமது முன்னோர்கள் கூரை வீடு மற்றும் ஓட்டு வீடு கட்டுவதற்கு பனை மரக்கட்டைகளை பயன்படுத்தி வந்தனர். முதிர்ந்த பனை மட்டைகளை வேலியாகவும் பயன்படுத்தி வந்தனர்.

மேலும் ஆறு, குளங்களின் கரைகள் வலு பெற பனங்கொட்டைகளை விதைத்து நீர் நிலைகளை காத்து வந்தனர். இவ்வாறு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய பனை மரங்களை தற்போது செங்கல் சூளைக்கும், அடுப்பு எரிக்கவும் பயன்படுத்துவதற்காக அதிகளவில் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் நீண்ட காலம் ஆயுளுடன் இருக்கும் பனை மரங்கள் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் சில இடங்களில் விவசாயிகள் பனை மரத்தால் ஏற்படும் நன்மைகள் கருதி அதனை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். தற்போது கோடை காலமாக இருப்பதால் விவசாய தொழிலாளர்கள் பொறையாறு, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை செய்து வருகின்றனர். குளிர்ச்சி தரும் நுங்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

நாகை மாவட்டம் பொறையாறு அருகே அரசலங்குடி கிராமத்தை சேர்ந்த கரிகாலன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனங்கொட்டைகளை விதைத்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்.

நான் இயற்கை மருத்துவ குணம் கொண்ட பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டின் தோட்டத்தில் பனங்கொட்டைகளை விதைத்தேன். அது வளர்ந்து பலன் தந்தது.

பனந்தோப்பு மற்றும் ஆற்றங்கரை பகுதியில் விழும் பனம் பழத்தை சேகரித்து அதன் கொட்டைகளை எடுத்து சங்கரன்பந்தல் வீரசோழன் ஆறு, நல்லாடை நண்டலாறு ஆகிய ஆற்றங்கரை பகுதிகளிலும், அரசலங்குடி, முனிவேலங்குடி ஆகிய கிராம பகுதியில் உள்ள தெருக்களிலும் பனங்கொட்டைகளை விதைத்தேன். தற்போது பனங்கன்று முளைத்து 1 அடி வரை வளர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு முதல் இன்று வரை 1,000 பனங்கொட்டைகளை விதைத்து உள்ளேன்.

பனை மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதோ, வேலி அமைத்து பராமரிப்பு செய்யும் பணியையோ செய்ய தேவையில்லை. தானாகவே வளர்ந்து பொதுமக்களுக்கு பயன்தரும். நம் முன்னோர்கள் விதைத்த இயற்கை வரப்பிரசாதமாக பனை மரத்தை நாம் அனுபவித்து வருகிறோம். வீட்டுக்கு ஒருவர் பனங்கன்றை விதைப்பு செய்தால் நமது குழந்தைகளுக்கு பயன்தரும்.

ஆனால் தற்போது பனை மரங்கள் அழிந்து வருகின்றன. இந்த இயற்கை மருத்துவம் குணம் கொண்ட பனை மரங்களை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story