கண்டமங்கலம் அருகே நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை முயற்சி


கண்டமங்கலம் அருகே நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 9 Jun 2018 4:30 AM IST (Updated: 9 Jun 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் அருகே நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம்,

நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக செஞ்சி அருகே பெருவளூரை சேர்ந்த மாணவி பிரதீபா, கடந்த 4–ந்தேதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் செஞ்சி அருகே மேல்சேவூரை சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவியும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் திருச்சி மாணவி சுபஸ்ரீயும் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவி, நீட் தேர்வு தோல்வி காரணமாக வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சேஷாங்கனூர் காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் அஷ்டலட்சுமி (வயது 17). இவர் கடந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வில் 735 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவம் படிக்க விரும்பிய இவர், நீட் தேர்வுக்காக சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

இதனைதொடர்ந்து கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை மாணவி அஷ்டலட்சுமி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தேர்வு மையத்தில் எழுதினார். எப்படியும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்து விடலாம் என்ற கனவுகளுடன் மாணவி அஷ்டலட்சுமி இருந்தார்.

சமீபத்தில் தேர்வு முடிவு வெளியானதில் மாணவி அஷ்டலட்சுமி, மிகவும் குறைவாக மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்தார். இதனால் தனது மருத்துவ படிப்பு கனவு கலைந்துவிட்டதே! என்று எண்ணி மனவேதனை அடைந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அஷ்டலட்சுமி, வி‌ஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story