குழந்தைகளை விலைக்கு வாங்கி வரும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


குழந்தைகளை விலைக்கு வாங்கி வரும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Jun 2018 3:45 AM IST (Updated: 9 Jun 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களில் இருந்து குழந்தைகளை விலைக்கு வாங்கி வரும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி,

தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டம், சைல்டுலைன் காப்பகம், முகாம் கூலி முறைக்கு எதிரான பிரசார இயக்கம் ஆகியவை சார்பில் “குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தை கடத்தல்” தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம் திருச்சி பீமநகரில் உள்ள ஒரு அரங்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் சீதாலெட்சுமி வரவேற்றார். மாநில அமைப்பாளர் பிரிட்டோ நோக்கவுரையாற்றினார். திருச்சி கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் பெரியய்யா தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருச்சி குழந்தைகள் நலக்குழும தலைவர் இந்திராகாந்தி பேசும்போது, “பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வறுமையின் காரணமாக வெறும் 500 ரூபாய்க்கு குழந்தைகள் விற்கப்படுகிறார்கள். அவ்வாறு விற்கப்படும் குழந்தைகள் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டு குழந்தை தொழிலாளர்களாக பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தொழிற்சாலைகளில் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டாலும், இதுபோல் வெளிமாநிலங்களில் இருந்து குழந்தைகளை விலைக்கு வாங்கி வரும் புரோக்கர்கள் தப்பி விடுகிறார்கள். அவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்தால், ஆயிரக்கணக்கான குழந்தைகளை காப்பாற்ற முடியும்.

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தும்போது, கண்டிப்பாக மணமகன் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் சமுதாயத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க முடியும். மாயமாகும் பெண் குழந்தைகள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்கிறார்கள். அந்த குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். அதுபோன்ற சமயங்களில் அந்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதில் அந்த பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்தால், பெண் குழந்தைகளை அழைத்து சென்ற நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று பேசினார்.

மாவட்ட அளவில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தை கடத்தலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.

Next Story