காசோலை மோசடி வழக்கு: எஸ்டேட் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை, பழனி கோர்ட்டு தீர்ப்பு


காசோலை மோசடி வழக்கு: எஸ்டேட் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை, பழனி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Jun 2018 4:45 AM IST (Updated: 9 Jun 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

காசோலை மோசடி வழக்கில் எஸ்டேட் பெண் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி பழனி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பழனி, 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் சுப்பநாயக்கர். இவருடைய மகன் சந்திரசேகர் (வயது 35). சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் கணபதி சுப்பிரமணியம். அவருடைய மனைவி கமலா (78). இவருக்கு திருப்பூர் மாவட்டம் கொழுமத்தில் சொந்தமாக எஸ்டேட் உள்ளது. இந்த நிலையில் கமலா தனக்கு சொந்தமான நிலத்தில் 10 ஏக்கரை கிரயம் செய்து கொடுப்பதாக சந்திரசேகரிடம் கூறியுள்ளார். மேலும் அதற்கான தொகையாக ரூ.20 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி நிலத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி சந்திரசேகர் கமலாவிடம் பலமுறை கேட்டுள்ளார். அதன் பிறகு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி ரூ.20 லட்சத்துக்கான காசோலையை சந்திரசேகரிடம் கமலா கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த காசோலையை வங்கியில் கொடுத்தபோது அதில் பணம் இல்லாமல் திரும்ப வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந்தேதி கமலா காசோலை மோசடி செய்ததாக பழனி குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகர் வழக்கு தொடர்ந்தார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், குற்றம்சாட்டப்பட்ட கமலா காசோலை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகையை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மணிகண்டன் தீர்ப்பளித்தார்.

Next Story