உலக கடல் தினத்தையொட்டி ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் தூய்மை பணி
உலக கடல் தினத்தையொட்டி ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
ராமேசுவரம்,
உலக அளவில் கடல்வளங்களை பாதுகாத்திடும் நோக்கத்தினை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 8–ந்தேதி உலக கடல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று மீன்வளத்துறை சார்பில் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த பணிகளில் இந்திய கப்பற்படை, கடலோர காவல்படை, மீன்வளத்துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்களும், ராமேசுவரத்தில் உள்ள பல்வேறு மீனவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 237 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை அமைந்துள்ளது. ராமேசுவரம் கடல் பகுதி கடல்சார் உயிரினங்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த சூழல் நிறைந்த கடல்பகுதியாகும். அதன்படி மாவட்டத்தில் கடல்வளங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.
மேலும் ராமேசுவரத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 2 கோடி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராமேசுவரத்தில் சுற்றுப்புற தூய்மையை மேம்படுத்தும் வகையில் பசுமை ராமேசுவரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நகரில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையை பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. மேலும் இத்திட்டம் 100 சதவீதம் வெற்றிகரமான திட்டம் என்ற வகையில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் இந்திய கப்பல்படை லெப்டினென்ட் கமாண்டர் தாஸ், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் கோபிநாத், மணிகண்டன் மற்றும் கடலோர காவற்படை, மீன்வளத்துறை சார்ந்த அலுவலர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.