சிவகங்கையில் ஆசிரியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
கல்வித்துறையில் இருந்து தொடக்கக் கல்வியை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க உள்ள தமிழக அரசின் முடிவை கண்டித்து சிவகங்கையில் ஆசிரியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஏழை, கிராமப்புற குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழக கல்வித் துறையில் இருந்து தொடக்கக் கல்வித் துறையை முற்றிலும் அகற்றும் அரசாணைகளை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும்.
2017–18–ம் ஆண்டு ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். புதிய இன்சூரன்ஸ் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளிஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ஆரோக்கியராஜ், ஞான அற்புதராஜ், துணைத்தலைவர் மாலா, துணைச் செயலாளர்கள் ரவி, ஜெயக்குமார், ஜீவாஆனந்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் இளங்கோ, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் நரசிம்மன், பொதுச்செயலாளர் சங்கர் மற்றும் அனைத்து ஒன்றியங்களின் வட்டார செயலாளர்கள் உள்ளிட்ட 500–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.