அடிப்படை வசதி கோரி அம்மா திட்ட முகாமை புறக்கணித்த கிராம மக்கள்


அடிப்படை வசதி கோரி அம்மா திட்ட முகாமை புறக்கணித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 8 Jun 2018 9:30 PM GMT (Updated: 8 Jun 2018 8:21 PM GMT)

விருதுநகர் அருகே அடிப்படை வசதி செய்து தரக்கோரி அந்த கிராமத்தில் நடந்த அம்மா திட்ட முகாமினை கிராம மக்கள் புறக்கணித்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள மெட்டுக்குண்டு கிராமத்தில் விருதுநகர் சமூகபாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சீதாலட்சுமி தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. வழக்கமாக அம்மா திட்ட முகாமின் போது முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கான கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காண்பது வழக்கம்.

ஆனால் மெட்டுக்குண்டு கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், சாலை சீரமைப்பு பணி முடங்கி உள்ளது என்று கூறியும் அம்மா திட்ட முகாமினை புறக்கணித்தனர். கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு முகாம் நடந்த இடத்துக்கு செல்வதை தவிர்த்தனர்.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத்தாய் என்ற பெண் கூறியதாவது:-

எங்கள் கிராம மக்கள் பயன்பாட்டில் உள்ள மெட்டுக்குண்டு-குல்லூர்சந்தை சாலை சீரமைப்பு பணி முடங்கிய நிலையில் உள்ளது. கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெப்பம் அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது. குடிநீர் பிடிக்கும் இடத்திலும் கழிவுநீர் தேங்கி உள்ளதால் குடிநீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் செயல்படாமல் முடங்கி உள்ளது. தெருவிளக்குகள் எரிவதில்லை. கிராமத்தில் சுகாதாரக்கேடு உள்ளதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

இது பற்றி பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. பிரச்சினைகள் தீர யாரிடம் மனு கொடுப்பது என்றும் தெரியவில்லை. எனவே தான் அம்மா திட்டத்தை புறக்கணித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த யூனியன் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மாரியப்பன், கிராம மக்களை சந்தித்து சாலை சீரமைப்பு பணியை விரைவுபடுத்துவதாகவும், மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். ஆனாலும் கிராம மக்கள் தொடர்ந்து அம்மா திட்ட முகாமினை புறக்கணித்தனர். 

Next Story