கிணற்றில் வீசி பெண் கொலை: காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த தொழிலாளி கைது


கிணற்றில் வீசி பெண் கொலை: காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 8 Jun 2018 8:30 PM GMT (Updated: 8 Jun 2018 8:28 PM GMT)

ராதாபுரம் அருகே கிணற்றில் வீசி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ராதாபுரம், 

ராதாபுரம் அருகே கிணற்றில் வீசி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண் கொலை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வி.என்.குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 80). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயக்கொடிக்கும் தெருவில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலையிலும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தனது கணவர் தொழிலாளியான ஆனந்தராஜிடம் ஜெயக்கொடி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், சுப்புலட்சுமி வீட்டிற்கு சென்றார். அங்கு தனியாக இருந்த சுப்புலட்சுமியை தூக்கி சென்று, ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் வீசினார். இதில் தலையில் அடிப்பட்டு சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி கைது

இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ஆனந்தராஜை தேடி வந்தனர். இந்த நிலையில் ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆனந்தராஜ் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று ஆனந்தராஜை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story