வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த கும்பலை போலீசார் மடக்கிபிடித்தனர்
முதலியார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போனை பறித்து சென்ற கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை முதலியார்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் சித்ரா(வயது 42). அழகுநிலையம் நடத்தி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் படித்து வருகிறார். 2–வது மகன் சித்ராவுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை சித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அவரது வீட்டிற்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். அவர்கள் சித்ராவின் வீட்டிற்குள் புகுந்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தாலி சங்கிலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட 8 பவுன் தங்க நகைகளை பறித்துச்சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டனர்.
அப்போது சித்ராவிடம் நகை பறித்தது, புதுவை கேன்டீன் வீதியை சேர்ந்த எட்வின்(25), வில்லியனூரை சேர்ந்த சந்தோஷ்(19), சவுத்திரி(19), பெருமாள், யோகேஷ்குமார் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் குற்றவாளிகள் வில்லியனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு இருந்த எட்வின், சந்தோஷ், சவுத்திரி ஆகிய 3 பேரும் தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை, 4 செல்போன் மற்றும் ஒரு கத்தி, ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட சந்தோஷ், வைத்திக்குப்பம் காங்கிரஸ் பிரமுகர் மாறன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பெருமாள், யோகேஷ்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.