சேலம் ஜங்ஷனில் கட்டணம் உயர்வு: ஆட்டோ டிரைவர்கள் தர்ணா போராட்டம்


சேலம் ஜங்ஷனில் கட்டணம் உயர்வு: ஆட்டோ டிரைவர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2018 3:21 AM IST (Updated: 9 Jun 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஜங்ஷனில் ஆட்டோ நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டதால், ஆட்டோ டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் ரெயில் பயணிகளின் வசதிக்காக ரெயில் நிலையம் முன் பகுதியில் இருந்து டவுன் பஸ்கள், கார் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. அதன்படி ஆட்டோ ஓட்டி வரும் டிரைவர்கள், ரெயில்வே நிர்வாகத்திற்கு மாதம் ரூ.100 கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று வந்தனர். அதன்பிறகு 6 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.1,800 செலுத்தும் வகையில் கட்டணம் வசூலிக்கும் முறை மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று ஆட்டோ ஸ்டேண்டை குத்தகை எடுத்துள்ள நபர், ஆட்டோ டிரைவர்கள் தரப்பில் 6 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.3,250 செலுத்தினால் மட்டுமே ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து ஆட்டோக்களை இயக்க முடியும் என்று அறிவித்தார். திடீரென கட்டண உயர்வால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர்கள், சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கத்தினர், த.மு.மு.க. தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தர்ணா போராட்டம்

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மூலம் அனுமதி கட்டணம் செலுத்தாத ஆட்டோக்கள் அனைத்தும் ஆட்டோ நிறுத்தம் இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டன. இதனால் ரெயில்வே போலீசாருக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் மிக குறைந்த அளவில் ரெயில்வே நிர்வாகம் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக நாளை மறுநாள் (திங்கட் கிழமை) ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே கோட்ட அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று கோட்ட மேலாளரிடம் மனு கொடுத்து முறையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Next Story