கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கர்நாடக கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
மங்களூரு, ஜூன்.9-
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கர்நாடக கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளில் தான் மழை வெளுத்து வாங்குகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியபோது, கர்நாடக கடலோர மாவட்டங்களை தான் புரட்டி போட்டது. தற்போதும் அங்கு தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
இதன்காரணமாக முக்கியமான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
கர்நாடக கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்று ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக நேற்றும், இன்றும் (சனிக்கிழமை) 2 நாட்கள் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்த மாவட்ட கலெக்டர்கள் சசிகாந்த் செந்தில், பிரியங்கா மேரி பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளனர். இதனை அறியாமல் நேற்று காலை மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு விடுமுறை என்று தெரிந்ததும் மகிழ்ச்சியில் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
கர்நாடக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், 3 மாவட்டங்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கர்நாடக கடலோர மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், 3 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மாவட்டங்களில் நேற்று பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலையோரம் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மழை விவரம்
நேற்று காலை 8 மணி நிலவரப்படி தட்சிண கன்னடா மாவட்டத்தில் 120.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 4.4 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:-
மங்களூரு 144.6, பண்ட்வால் 129, பெல்தங்கடி 84.5, புத்தூர் 124, சுள்ளியா 121.1.
Related Tags :
Next Story