மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு பொன்விழா ஆண்டு போட்டிகள்: கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல் + "||" + Tamil Nadu Golden Jubilee Years Competition for College Students - Collector S.Prabhakar Information

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு பொன்விழா ஆண்டு போட்டிகள்: கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு பொன்விழா ஆண்டு போட்டிகள்: கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்
தமிழ்நாடு பொன்விழா ஆண்டினை முன்னிட்டு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெறும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் அறிவித்து உள்ளார்.
ஈரோடு, 

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு 1967-ம் ஆண்டில் அமைந்தபோது அப்போதைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி தமிழ்நாடு என்று நமது மாநிலத்துக்கு பெயர் மாற்றப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு நடந்து 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு, தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக தமிழக அரசு கொண்டாட உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் அனைவரும் உணரும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

போட்டிகளுக்கான தலைப்புகள் பேரறிஞர் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், வி.கல்யாணசுந்தரனார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் படைப்புகளை அடியொற்றி அமையும்.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தலா முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாநில போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல் பரிசாகவும், ரூ.25 ஆயிரம் 2-ம் பரிசாகவும், ரூ.10 ஆயிரம் 3-ம் பரிசாகவும், அனைவருக்கும் தலா 4 கிராம் தங்கமும் பரிசாக வழங்கப்படும். இந்த பரிசுகள் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விழாவில் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் வருகிற 25-ந் தேதி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன் வந்து கலந்து கொள்ளலாம். போட்டி நடைபெறும் நாள் அன்று ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனரிடம் நேரில் வழங்கினால் போதுமானது.

எனவே இந்த வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி சிறப்பாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.