மாவட்ட செய்திகள்

நீட் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்களின் 1,450 மருத்துவ இடங்கள் பறிபோய் விட்டன: ஈரோட்டில் ஜவாஹிருல்லா பேட்டி + "||" + Jawahrullah, state president of the Humanitarian People's Party in Erode said that 1,450 medical seats of Tamil Nadu students were lost due to the selection.

நீட் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்களின் 1,450 மருத்துவ இடங்கள் பறிபோய் விட்டன: ஈரோட்டில் ஜவாஹிருல்லா பேட்டி

நீட் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்களின் 1,450 மருத்துவ இடங்கள் பறிபோய் விட்டன: ஈரோட்டில் ஜவாஹிருல்லா பேட்டி
நீட் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்களின் 1,450 மருத்துவ இடங்கள் பறிபோய் விட்டதாக ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
ஈரோடு, 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஈரோடு பவானி ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முகமது ரிஸ்வான் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஏ.சித்தீக் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் செயல்பாடுகளால் தமிழக மக்களின் உரிமை பறிக்கப்பட்டு உள்ளது. இந்த உரிமையை மீட்டெடுக்கும் கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி படுதோல்வி அடைந்து உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டு நீட் தேர்வு. இந்த தேர்வில் தோல்வி அடைந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இனிமேல் தற்கொலை சம்பவங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்லூரிகளின் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

நீட் தேர்வு காரணமாக இந்த ஆண்டு தமிழக மாணவர்களின் 1,450 மருத்துவ இடங்கள் பறிபோய் விட்டன. பிளஸ்-2 தேர்வில் தமிழகத்தில் மாணவர்கள் 91.1 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர். ஆனால் நீட் தேர்வில் 39.55 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். இதில் தமிழகம் 35-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஆனால் ஏழை மாணவர்களின் மருத்துவ கணவு தகர்க்கப்பட்டு உள்ளது. எனவே நுழைவு தேர்வு அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பசுமை சாலை எனப்படும் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதில் 1 ஏக்கர், 2 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட உள்ளது. விவசாய நிலத்தை அழித்தால் உணவு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும்.

பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என்று கூறி ஒடுக்கப்படுகிறது. தூத்துக்குடியில் நடந்ததே கடைசி துப்பாக்கி சூடு சம்பவமாக இருக்க வேண்டும். இதற்குமேல் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கக்கூடாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் சீருடை அணியாமல் ஸ்னைபர் துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டு உள்ளனர். தமிழக போலீசார் உள்பட பல்வேறு மாநில போலீசாருக்கு, பாலஸ்தீனர்களை தாக்கும் இஸ்ரேல் படை வீரர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஐதராபாத் போலீஸ் அகாடமி, இஸ்ரேலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.

மக்களை பாதிக்கும் திட்டத்துக்கு எதிராக போராடும் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் நெருக்கடிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். எனவே ஜனநாயக விரோத ஆட்சி மக்களால் விரட்டியடிக்கப்படும்.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம், த.மு.மு.க. துணை செயலாளர் ஆட்டோசாகுல், துணைச்செயலாளர் மெகபூப்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.