அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு


அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 9 Jun 2018 3:56 AM IST (Updated: 9 Jun 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. இந்த மையத்தின் மூலம் மாணவர் சேர்க்கைக்கு 3,882 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தர்மபுரி,

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன. இதற்காக தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 3,882 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த பணியை கல்லூரி முதல்வர் வளர்மதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். நேர்முக உதவியாளர் அறிவழகன், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். முதல்நாள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க 480 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் வளர்மதி கூறியதாவது.

தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் விண்ணப்பித்துள்ள 3,882 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கி உள்ளது. வருகிற 14-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடர்ந்து நடைபெறும். ஒவ்வொரு நாளும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்பவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிசான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்படுகின்றன. சான்றிதழ்களில் ஏதேனும் தவறுகள் இருந்து திருத்தம் தேவைப்பட்டால் அதை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் குறித்த நேரத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுபவர்களுக்கு வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இந்த வாய்ப்பை விடுபடும் மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம். தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கணினி பொறியியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 60 இடங்கள் என மொத்தம் 300 இடங்கள் இந்த கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் நடப்பாண்டில் நிரப்பப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story