சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அதிகாரிகளோடு போலீஸ் கமிஷனர் ஆலோசனை
சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசார் பணிச்சுமை காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு பிரச்சினைகளுக்காக இடைவிடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன. இதனால் இடைவிடாமல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்கள் சுற்றுப்பயணம் செய்யும்போது, தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் இரவு-பகல் பாராமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை என்று போலீசாருக்கு ஒரு மனக்குறை இருந்தவண்ணம் உள்ளது. இதுபோன்ற இடைவிடாத பணிச்சுமையால் தங்களது குடும்பத்தை கவனிக்க முடியவில்லை என்றும் போலீசார் உள்ளக்குமுறலுடன் உள்ளனர்.
மன அழுத்தம்
இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் போலீசார் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன. போலீசாருக்கு தேவையான விடுமுறை அளிக்க வேண்டும், அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் போலீசாரால் எழுப்பப்பட்டுள்ளது.
போலீசாரின் மனக்குறையை போக்கும்வகையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளார் என்றும், சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க உள்ளதாகவும், நேற்று ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் பரவியது.
இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஆலோசனை
சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கலாமா? என்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசித்து வருகிறோம். அதில் உள்ள சாதக-பாதக அம்சங்கள் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். முதல்கட்டமாக, முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை காவலர்களுக்கு மட்டும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கலாமா?, அதற்கடுத்தாற்போல, சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை சலுகையை கொடுக்கலாமா? என்பது பற்றியெல்லாம் யோசித்து வருகிறோம்.
போலீஸ் துறையைச் சேர்ந்த சிலர் விடுமுறை நாட்களில் வேலைபார்த்து அதனால் கிடைக்கும் பணபலனை அனுபவித்து வருகிறார்கள். விடுமுறை கிடைக்கும்பட்சத்தில் பணபலனில் குறைவு ஏற்படும். அதை சிலர் விரும்பவில்லை. ஒட்டுமொத்தமாக இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story