13 வயதில் வீட்டை விட்டு வெளியேறியவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
13 வயதில் வீட்டை விட்டு வெளியேறி தமிழகம் வந்த, மனநலம் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச மாநில வாலிபர், 22 ஆண்டுகளுக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்டைக்கப்பட்டார்.
பூந்தமல்லி,
உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் மங்கல்(வயது 35). தாய்-தந்தையை இழந்த இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர். தனது 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், கடந்த சில வருடங்களாக பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து, கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் மூலம் சென்னை வந்தார்.
திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித்திரிந்த மங்கலை போலீசார் மீட்டு மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கடந்த 4 ஆண்டுகளாக அவரை தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் அவருக்கு சிறிது, சிறிதாக பழைய நினைவுகள் திரும்பியது.
உறவினர்கள் கண்டுபிடிப்பு
இதற்கிடையில் மாநில குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் தாஹிரா, அடிக்கடி இந்த காப்பகத்துக்கு வந்து செல்வார். அவருக்கு இந்தி தெரியும் என்பதால் மங்கலிடம் இயல்பாக பேசி பழகினார்.
அப்போது அவர் முணுமுணுத்த சில வார்த்தைகளை வைத்தும், இணைய தள உதவியுடனும் மங்கலின் உறவினர்கள் யார்?, எங்கு உள்ளனர்? என விசாரணை நடத்தி வந்தார்.
அதில் உத்தரபிரதேச மாநிலத்தில் மங்கலின் அக்கா மீனா, மாமா சுந்தர்லால் ஆகியோர் வசிக்கும் இடத்தை கண்டு பிடித்தார். மங்கலின் தற்போதைய படத்தை, அந்த மாநில போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி, அவரது சகோதரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒப்படைப்பு
இதையடுத்து அவர்கள் சென்னை புறப்பட்டு வந்தனர். அவர்களை கண்டதும் அடையாளம் கண்டு கொண்ட மங்கல், தனது அக்கா மற்றும் மாமாவை கட்டிப் பிடித்துக் கொண்டார். 13 வயதில் மாயமான தனது தம்பி, 22 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் இருப்பதை கண்ட மீனா, மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். மாநில குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் தாஹிரா மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் மங்கலின் சிறு வயது புகைப்படம், அவரது அங்க அடையாளங்களை அவர்கள் காண்பித்தனர். அவர்கள் இருவரும் யார்? என கேட்டதற்கு மங்கலும் உறவு முறையை சரியாக கூறினார்.
இதையடுத்து மங்கல் அவரது அக்கா, மாமாவிடம் ஒப்படைக்கப்பட்டு, 3 பேரும் ரெயில் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story