சோழவரம் அருகே காரை வழிமறித்து 8 பேர் கும்பல் ரூ.28 லட்சத்தை பறித்துச் சென்றதா?


சோழவரம் அருகே காரை வழிமறித்து 8 பேர் கும்பல் ரூ.28 லட்சத்தை பறித்துச் சென்றதா?
x
தினத்தந்தி 9 Jun 2018 4:32 AM IST (Updated: 9 Jun 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

சோழவரம் அருகே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பொன்னேரி, 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ‘ஜெர்சி’ என்ற பால் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் உள்ள கடைகளுக்கு அனுப்பி விற்கப்பட்டு வருகிறது.

பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு ஏற்ப தினந்தோறும் பணத்தை ஒரக்காடு கம்பெனிக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த பணத்தை மொத்தமாக சேர்த்து தினமும் சென்னை கிண்டியில் உள்ள வங்கி கிளையில் செலுத்துவார்கள். பால் கம்பெனியில் இருந்து தனியார் ஏஜென்சி மூலம் இந்த பணம் எடுத்துச்செல்லப்படுவது வழக்கம்.

8 பேர் கும்பல்

தனியார் ஏஜென்சியின் காரை தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார். இதில் துப்பாக்கி ஏந்திய ஒப்பந்த காவலர் திருத்தணியை சேர்ந்த லோகநாதன் (52) பாதுகாப்புக்காக வருவார். பணத்தை கொண்டு செல்வதற்கான பணியில் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேட்டை சேர்ந்த ஏஜென்ட் ராஜ்குமார் (27), அம்பத்தூர் வெங்கடாபுரத்தை சேர்ந்த காசாளர் பாலாஜி (42) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த 4 பேரும் நேற்று மாலை வழக்கம்போல ஒரக்காடு பால் கம்பெனிக்கு வந்து நிர்வாகத்திடம் இருந்து வசூலான ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு ஒரு பெட்டியில் வைத்து காரில் எடுத்துச் சென்றனர். இந்த கார் பணத்துடன் கம்பெனியில் இருந்து 500 மீட்டர் தூரம் சென்றவுடன் 4 மோட்டார் சைக்கிளில் 8 பேர் கொண்ட கும்பல் வந்து காரை வழிமறித்தது.

ரூ.27.80 லட்சம்

அந்த கும்பல் கார் கண்ணாடியை உடைத்ததும் டிரைவர் காரை நிறுத்திவிட்டார். உடனே அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி காரில் இருந்த ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் விசாரணை செய்த பின்னர், கார் டிரைவர் பாலசுப்பிரமணி, பாதுகாவலர் லோகநாதன், ஏஜென்ட் ராஜ்குமார், காசாளர் பாலாஜி ஆகியோரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

4 பேரிடமும் விசாரணை

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, பொன்னேரி துணை சூப்பிரண்டு ராஜா ஆகியோர் சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து 4 பேரிடமும் சந்தேகத்தின் பேரில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் சோழவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story