பூமியின் பாதுகாப்பு குடை ஓசோன்'


பூமியின் பாதுகாப்பு குடை ஓசோன்
x
தினத்தந்தி 9 Jun 2018 5:44 AM GMT (Updated: 9 Jun 2018 5:44 AM GMT)

பூமியில் பெரும் பகுதி வகிக்கும் கடல், பரந்து விரிந்த வானம் இவற்றை யாராவது மாசுபடுத்த முடியுமா?

ஆம், மாசுபடுத்த முடியும் என்ற நிலை பெருகி வரும் தொழிற்சாலைகள், ஜனத்தொகை, வாகனங்கள் மற்றும் மரங்களை வெட்டுவது போன்ற காரணங்களால் ஏற்பட்டு உள்ளது.

மனித குலத்தின் அசுர வளர்ச்சி பல வழிகளில் பூமிக்கும் அதன் வளிமண்டலத்துக்கும் ஆபத்தை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக புறஊதாக்கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழ தொடங்கி இருக்கிறது என்ற அச்சுறுத்தல் சில ஆண்டுகளாக எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது. இது நமக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடும். நம்மை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது.

நாமும், உயிரினங்களும் சுவாசிக்கும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களை கொண்ட ஆக்ஸிஜன் வாயுவின் மற்றொரு பரிணாமம் தான் ஓசோன். இதில் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களுக்கு பதிலாக மூன்று அணுக்கள் இருக்கும். ஓசோன் வாயு வளிமண்டலத்தில் மட்டும்தான் இருக்கிறது என நம்மில் பலரும் நினைப்பதுண்டு.

ஆனால், நாம் சுவாசிக்கும் காற்றிலும் இது கலந்துள்ளது. ஆனால் மிகக்குறைவான அளவில் கலந்து இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் இவ்வாயுவால் நிலைத்திருக்க முடியாமல் சிதைந்துபோவதால் வளிமண்டலத்தில் ஒன்று திரண்டு ஒரு அடுக்கு போன்று இருக்கிறது. இந்த அடுக்கைத்தான் நாம் ஓசோன் படலம் என்கிறோம்.

இந்த படலம் தான் புற ஊதா கதிர்களிடம் இருந்து நம்மை காக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணியை செவ்வனே செய்கிறது. சூரியனிடம் இருந்து வரும் புறஊதா கதிர்களில் கிட்டத்தட்ட 99 சதவீதம் கதிர்களை இந்த ஓசோன் படலம் உறிஞ்சிக்கொள்கிறது. இது ஒரு வேதிவினை மூலம் நடக்கிறது.

அதாவது, ஓசோன் படலத்தில் இருக்கும் ஓசோன் வாயுவும், அதன் மீது படும் புறஊதா கதிர்களும் சேர்ந்து வினைபுரியத் தொடங்கி விடுகின்றன.

இதன் முடிவில் ஓசோனும், புறஊதா கதிர்களும் சிதைந்து ஆக்ஸிஜன் வாயு, ஆக்ஸிஜன் அணு மற்றும் வெப்ப ஆற்றலாக வெளிப்படுகின்றன. இந்த வேதிவினை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். அதாவது, ஓசோன் படலம் புறஊதா கதிர்களை உறிஞ்சிக்கொண்டு, தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொண்டே இருக்கும். ஓசோன் படலத்தை ஊடுருவ முடியாததால், புறஊதா கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குவதில்லை.

புற ஊதாகதிர்கள் தீங்கு விளைவிக்க கூடியவை. இவை மனிதர்களுக்கும், நுண்ணுயிர் தாவரங்களுக்கும் பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தோல் புற்றுநோய், கண்புரை நோய், மரபணு நோய் போன்ற நோய்களை உருவாக்குகின்றன. அதனால் தான் புறஊதா கதிர்களை தடுக்கும் ஓசோன் படலத்தை நம்மை காக்கும் குடை என்று குறிப்பிடுகிறோம்.

மலைப்பிரதேசத்தில் உள்ள மக்கள் புறஊதா கதிர் வீச்சால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் சிவந்த நிறம் உடையவர்கள் அதிக கதிர் வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

1980-களில் அண்டார்டிகா பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதற்கு காரணம் ஹைட்ரோ புளோரோ குளோரோ கார்பன்களான சி.எப்.சி, ஹேலோன், எச்.சி.எப்.சி. போன்ற வேதிப்பொருட்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த வேதிப் பொருட்கள் (ஓ.டி.எஸ்.) ஓசோன் டிப்ளடிங் சப்ஸ்டன்சஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு குளோரின் அணு பல்லாயிரக் கணக்கான ஓசோன்களை அழிக்கும் வல்லமை உடையது. இதனால் ஓசோன் படலத்தில் ஓசோனின் அடர்த்தி குறையும். அடர்த்தி குறையும் இடத்தைதான் நாம் ஓசோனில் துளை என்று சொல்கிறோம். அதன் வழியாக புறஊதா கதிர்களால் எளிதாக ஊடுருவ முடியும்.

இந்த ஓ.டி.எஸ். வேதிபொருட்கள் சிறந்த குளிர்விப்பானாக குளிர்சாதனப்பெட்டி, ஏ.சி. எந்திரம், தீயணைப்பான், பெயிண்ட் ஸ்ப்ரேயர் எனப் பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, இவற்றின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்தேதி புரோட்டக்கால் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 1996-ம் ஆண்டு ஓசோன் குறித்த சட்டம் விரைவு படுத்தப்பட்டது. அதன்படி பல்வேறு நாடுகளில் சி.எப்.சி. மற்றும் ஹேலோன்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டுவிட்டது. இதன் விளைவாக ஓசோன் படலத்தின் வளர்ச்சி மேம்படும் என (எஸ்.ஜி.ஐ. ஓரிஜின் 2000 கம்ப்யூட்டர்) கணிக்கிறது. 2068-ம் ஆண்டு அதன் வளர்ச்சி முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் நம் நாட்டில் சி.எப்.சி. மற்றும் ஹேலோன்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் எச்.சி.எப்.சி. குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை கட்டுப்படுத்தி மற்ற பாதுகாப்பான குளிர்விப்பான்களை பயன்படுத்த வேண்டும். மாற்று தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும் அநேக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்கின்றவர்களுக்கு இயற்கை நல்ல ஆரோக்கியமான வாழ்வை தருகிறது. அதனை மீறும்போது விபரீத விளைவுகளே ஏற்படுகின்றன.

எனவே, ஓசோன் என்ற குடையில் துளை ஏற்படாதவாறு அதனை காப்போம்.

- பேராசிரியை ஞா.வான்மதி

Next Story