திருச்சி மாநகரை உலுக்கிய சூறைக்காற்று; மரங்கள், பதாகைகள் சாய்ந்தன


திருச்சி மாநகரை உலுக்கிய சூறைக்காற்று; மரங்கள், பதாகைகள் சாய்ந்தன
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 6:48 PM GMT)

குப்பை, தூசிகளை பறக்க செய்து திருச்சி மாநகரை உலுக்கிய சூறைக்காற்றால். மரங்கள், பதாகைகள் பல இடங்களில் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வகையில் வெயில் கடுமையாக இருந்தது. மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான அறிகுறி தென்படுவதுபோல வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. ஆனால், மழை பெய்யாமல் பொய்த்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. மதியம் எதிர்பாராத வகையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு இதமான காற்றுடன் மழை லேசாக தூறல் போட தொடங்கியது. மழை பெரிய அளவில் வரும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில், கடுமையான சூறைக்காற்று வீசத்தொடங்கியது. இதனால், மழை மேகங்கள் எல்லாம் கலைந்து சென்று விட்டன. மாறாக திருச்சி மாநகரை உலுக்கும் வகையில் சாலைகளில் குப்பை மற்றும் தூசிகளை பறக்க செய்யும் அளவுக்கு சூறைக்காற்று வலுப்பெற்றது.

இதனால் சாலைகளில் உள்ள மண், தூசிகள் பறந்தன. அவை இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் கண்களில் விழுந்து கடும் அவதிக்குள்ளாக்கியது. மேலும் வாகனத்தை தொடர்ந்து ஓட்டவும் விடாமல், உருட்டவும் விடாமல் காற்று தடை ஏற்படுத்தியது. மாநகரில் போலீசாரால் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகள்(பேரிகாட்) அப்படியே ரோட்டில் சாய்ந்து விழுந்தன. இதனால், அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தெருவோரமாக கொட்டப்பட்ட குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளிலும், தெருக்களிலும் விழுந்தன. அத்துடன் காற்றில் அடித்து வரப்பட்ட மண்துகள்கள் வீடுகளிலும் குவிந்தன. வீட்டில் சாத்தப்படாமல் விடப்பட்ட கதவுகள், ஜன்னல்கள் சூறைக்காற்றினால் படார், படார் என அடிக்கத் தொடங்கின.

வியாபாரிகள் சாலையோரங்களில் அமைத்திருந்த ‘சன்சைடு’ தடுப்புகள் சில காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பறந்தன. பல குடிசை வீடுகளில் உள்ள கூரைகள் அலேக்காக பறந்து சென்றன. மாநகரில் பல இடங்களில் சாலை சந்திப்புகளில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் காற்றில் அப்படியே சரிந்தன. காற்று இல்லாமல் அசையாமல் சிலைபோன்று நின்ற மரங்கள் எல்லாம், சூறைக்காற்றால் பேயாட்டம் ஆட தொடங்கியது. குறிப்பாக தென்னை மரங்கள் சுழன்று.. சுழன்று ஆடின.

திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானம் அருகில் உள்ள பிரதான சாலையில் மேம்பாலத்திற்கு கீழே அனைத்தும் வாகனங்களும் சென்று வருகின்றன. திருச்சி ஜங்ஷனில் இருந்து மதுரை பைபாஸ் சாலைக்கு செல்லும் பாதையில் மாநகர போலீசாரால் நீண்டதூரம் வைக்கப்பட்டிருந்த சாலைதடுப்புகள் அப்படியே ரோட்டில் விழுந்தன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. வருவதும் போவதுமாக இருந்த மின்சாரம் குறிப்பிட்ட பகுதிகளில் பிற்பகல் 1.30 மணியில் இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. திருச்சி-புதுக்கோட்டை சாலையில் பால்பண்ணை அருகே பிற்பகலில் பெரிய மரக்கிளை ஒன்று சூறைக்காற்றால் ஒடிந்து விழுந்தது. அந்த மரக்கிளையானது சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் விழுந்ததால் மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகளும் அறுந்தன. இதனால், வாகன போக்குவரத்து மிகுந்த அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது. உடனடியாக அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் விரைந்து வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் சாலையோரம் உள்ள சாக்கடையில் கழிவுகள் அகற்றி அப்படியே சாலையோரமே வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து பாலித்தீன் பைகள், குப்பை உள்ளிட்டவை மீண்டும் சாக்கடை கால்வாயில் விழுந்து நிரம்பின. மேலும் சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த காற்றின் வேகம் படிப்படியாக குறைய தொடங்கியது. ஆனாலும், திருச்சியில் சுத்தமாக வைக்கப்பட்டிருந்த பல இடங்கள், சூறைக்காற்றால் குப்பைகளால் நிறைந்தன. 

Next Story