ஊட்டியில் மூடப்பட்ட எச்.பி.எப். தொழிற்சாலை இடத்தில் ஐ.டி. பூங்கா அமைவதற்கு வரவேற்பு
ஊட்டியில் மூடப்பட்ட எச்.பி.எப். தொழிற்சாலை இடத்தில் ஐ.டி. பூங்கா அமைவதற்கு உள்ளூர் மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர் ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (எச்.பி.எப்.) தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதனை தொடர்ந்து கடந்த 1967–ம் ஆண்டு ஜனவரி மாதம் 7–ந் தேதி பிரதமர் இந்திரா காந்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார். இதனால் நீலகிரியில் வேலைவாய்ப்பு பெருகியதால் மாவட்டத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது.
சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அங்கு உற்பத்தி செய்யப்படும் பிலிம், எக்ஸ்ரே பிலிம், போட்டோ பிலிம் ஆகியவைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் விற்பனை ஏஜெண்ட்டுகள் பயன் அடைந்தனர். கடந்த 1991–ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய பொருளாதார கொள்கை காரணமாக, வெளிநாடுகளில் இருந்து பிலிம், எக்ஸ்ரேக்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பிலிம்கள், எக்ஸ்ரேக்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் எச்.பி.எப். தொழிற்சாலை நலிவடைய தொடங்கியது. மேலும் தொழிற்சாலையில் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்ததால், லாபம் அடைய முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வந்தது. அதன் காரணமாக தொழிலாளர்கள் ஓய்வு பெற்றும், விருப்ப ஓய்விலும் சென்று விட்டனர். மீதம் இருந்த 165 தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்கொடைகள் வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 24–ந் தேதி தொழிற்சாலையை விட்டு தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்ற நோட்டீசு நிர்வாகம் மூலம் ஒட்டப்பட்டது.
எச்.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் உயர்தர மருத்துவமனை, தோட்டக்கலை பல்கலைக்கழகம், மத்திய அரசின் உயர்தர கல்வி மையம் போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டபையில் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், எச்.பி.எப். தொழிற்சாலையில் போதுமான இடவசதி இருப்பதால், அங்கு பல்நோக்கு மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இதற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொழிற்சாலை வளாகத்தில் ஐ.டி. பூங்கா அமைக்கும் எண்ணம் அரசுக்கு உண்டு என்று பதிலளித்து உள்ளார். இதற்கு உள்ளூர் மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய தேயிலை வாரிய துணைத்தலைவர் குமரன் கூறியதாவது:–
தமிழக அரசு எச்.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் ஐ.டி. பூங்கா அமைக்க எண்ணம் உள்ளது என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அங்கு 600 ஏக்கர் பரப்பளவை கொண்ட நிலம் உள்ளது. இதில் 20 ஏக்கர் நிலத்தில் ஐ.டி. பூங்காவை அமைக்கலாம். மீதம் உள்ள இடத்தில் உயர்தர மருத்துவமனை, தோட்டக்கலை பல்கலைக்கழகம், மத்திய அரசின் உயர்கல்வி மையம் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து வருகிற வாரம் டெல்லி சென்று மத்திய அரசின் சுகாதாரத்துறை மந்திரி நட்டாவை சந்தித்து, உயர்தர மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மண்டல லயன்ஸ் கிளப் கவர்னர் கட்டாரியா கூறியதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிமாவட்டங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எச்.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் ஐ.டி.பூங்கா அமைத்தால் அப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் அங்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் அரசு மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து மருத்துவ சுற்றுலா சம்பந்தமான ஹெலிகாப்டர் சர்வீஸ் நடத்த வேண்டும். இதன் மூலம் ஊட்டியில் சுற்றுலா மேம்படுத்தப்படுவதுடன், இளைஞர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.