உளுந்தூர்பேட்டையில் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பெண்


உளுந்தூர்பேட்டையில் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பெண்
x
தினத்தந்தி 10 Jun 2018 5:00 AM IST (Updated: 10 Jun 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

மதுகுடித்து விட்டு போதை தலைக்கேறியதும் பெண் ஒருவர் நடுரோட்டில் நேற்று ரகளையில் ஈடுபட்டார்.

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள திருச்சி சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், நீதிமன்ற வளாகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், போலீஸ் குடியிருப்பு, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன.

இச்சாலையில் நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் அங்கும், இங்குமாக ஓடிக்கொண்டிருந்தார். மேலும் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ–மாணவிகளை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டார்.

பின்னர் அந்த பெண், சாலையின் குறுக்கே படுத்துக்கொண்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, கற்களை வீசி தாக்கினார். இதை அந்த வழியாக சென்ற இளைஞர்கள் பார்த்து தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த பெண்ணை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story