அருப்புக்கோட்டையில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டையில் டாஸ்மாக் மதுபானக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் திருச்சுழி சாலையில் மரக்கடை பஸ் நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக்கடை சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் மதுபானக்கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக அந்தப்பகுதியினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகரசெயலாளர் காத்தமுத்து, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பூங்கோதை, செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலையில் திரண்டு வந்து மரக்கடை பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மதுபான கடை திறக்க கூடாது என்று கோஷமிட்டனர். அவர்களிடம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.