தமிழகம் பதற்றமாகவே இருக்க வேண்டும் என திட்டமிடும் தீயசக்திகள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு


தமிழகம் பதற்றமாகவே இருக்க வேண்டும் என திட்டமிடும் தீயசக்திகள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 7:15 PM GMT)

தமிழகம் எப்போதும் பதற்றமாகவே இருக்க வேண்டும் என நினைக்கும தீய சக்திகள் திட்டமிட்டு சில பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா திருத்தங்கலில் நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர்திட்ட அலுவலர் தெய்வேந்திரன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 147 பெண்களுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், திட்ட இயக்குனர் சுரேஷ், சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா, அ.தி.மு.க. திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ரமணா, கிருஷ்ணமூர்த்தி, ரவிசெல்வம், சேதுராமன், சிவகாசி வீட்டு வசதி சங்க தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பாலையும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது. இதில் தரம் குறைந்த பால் கொண்டுவரப்பட்டால் மட்டும் கொள்முதல் செய்வதில்லை. அதிகபட்சமாக கடந்த வெள்ளியன்று 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான பால் கொள்முதல் செய்யப்படுவதால் மீதி உள்ள பாலை கொண்டு வெண்ணை, நெய் மற்றும் பால் பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை உடனே சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பால்வளத்துறையை மேம்படுத்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதை கொண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பால்வளத்துறை பெரிய அளவில் வளர்ச்சி பெறும். ஆவின் பால் தரமாக உள்ளதால் வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் கூட ஆவின்பாலை விரும்புகிறார்கள். 15 வெளிநாடுகளுக்கு பால் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலும் ஆவின் பால் விற்பனை மையம் திறக்கப்பட உள்ளது. தற்போது சிங்கப்பூருக்கு அதிகளவில் ஆவின்பால் அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக முக்கிய சாலைகளில் ஆவின் பாலகம் திறக்கப்பட உள்ளது. குறிப்பாக 4 வழிச்சாலையில் பொதுமக்களுக்கு வசதியாக ஆவின் பாலகங்கள் திறக்கப்பட்டு பால்பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் வேதனையானது. இனி வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளும் நீட்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 500 மாணவ, மாணவிகளில் 245 பேர் வெற்றி பெற்றுள்ளார். இனிவரும் ஆண்டுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். சிலர் மாணவர்களை துண்டிவிடுகிறார்கள். இதனால் தான் நீட் தேர்வு குறித்து அவ்வபோது பிரச்சினை எழுகிறது. தென் தமிழகம் எப்போதும் பதற்றமாகவே இருக்க வேண்டும் என்று சில தீய சக்திகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதை முறியடித்து முதல்–அமைச்சர் இந்த பிரச்சினைக்கு நிரந்தரவு தீர்வு கண்டுள்ளார். தமிழகம் தற்போது அமைதிபூங்காவாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story