ராயப்பன்பட்டிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு: ஊராட்சி நிர்வாகம்-பொதுப்பணித்துறை மோதல்


ராயப்பன்பட்டிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு: ஊராட்சி நிர்வாகம்-பொதுப்பணித்துறை மோதல்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:45 PM GMT (Updated: 9 Jun 2018 7:22 PM GMT)

ராயப்பன்பட்டி ஊராட்சிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைக் கப்பட்டது தொடர்பாக பொதுப்பணித்துறைக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் ஒன்றியத்தில் ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், உ.அம்மாபட்டி உள்பட 13 ஊராட்சிகள் உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக ராயப்பன்பட்டி உள்ளது. இங்கு மொத்தம் 13 வார்டுகள் உள்ளது. இதில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் மக்கள் வசித்து வருகின்றனர். கிராம ஊராட்சியிலே மூன்று மேல்நிலைப்பள்ளிகளை கொண்ட ஊராட்சியாகவும் ராயப்பன்பட்டி உள்ளது. இங்குள்ள மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு உள்ளது. சுருளிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சுருளிப்பட்டி முல்லைபெரியாற்றில் உறைகிணறு அமைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் குழாய் வழியாக ராயப்பன்பட்டிக்கு வருகிறது.

இதே போல் கோகிலாபுரம் முல்லைப்பெரியாற்றில் உறை கிணறு அமைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் பூமிக்கடியில் குழாய் பதித்து ராயப்பன்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் சாலையின் அருகே குழாய் பதிக்கப்பட்டதால் அடிக்கடி சேதம் அடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க முடியவில்லை.

எனவே குடிநீர் குழாயை இங்குள்ள குளத்து கரையோரம் பதித்து கொண்டு செல்ல ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதையொட்டி குழாய் பதிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதற்கு உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பினர். மேலும் இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் நேரில் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும் குளத்து கரையோரம் குழாய் பதிப்பதற்கு அனுமதி வழங்காமல் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறாமல் தாமதம் செய்யப்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க முடியவில்லை.

இதையடுத்து ராயப்பன்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குளத்து கரையோரமாக குழாய்களை பதித்து ஊராட்சியில் உள்ள மேல் நிலைநீர்தேக்க தொட்டிக்கு கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குளத்து கரையில் பதிக்கப்பட்ட குழாயை பொதுப்பணித்துறை அலுவலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து உடைத்துவிட்டனர். இதனால் ராயப்பன்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, குளத்து கரை பகுதியில் குழாய் பதிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் எங்களிடம் அனுமதி பெறவில்லை. அனுமதி இன்றி பதித்ததால் குழாய்களை தோண்டி உடைத்துவிட்டோம். எங்களிடம் முறையாக அனுமதி பெற்ற பின்னர்தான் குழாய் பதிக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குளத்து கரை வழியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் பதித்த குடிநீர் குழாயை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பொதுப்பணித்துறையினர் தோண்டி உடைத்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும். பொதுப்பணித்துறை அலுவலர்கள் தன்னிச்சையாக குழாயை உடைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைக்கப்பட்டது தொடர்பாக பொதுப்பணித்துறைக்கும், ராயப்பன்பட்டி ஊராட்சிக்கும் இடையே எழுந்துள்ள மோதல் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story