திருவாடானை தொகுதியை கருணாஸ் ரிமோட் கண்ட்ரோலில் இயக்க நினைக்கிறார் அமைச்சர் மணிகண்டன் குற்றச்சாட்டு


திருவாடானை தொகுதியை கருணாஸ் ரிமோட் கண்ட்ரோலில் இயக்க நினைக்கிறார் அமைச்சர் மணிகண்டன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Jun 2018 4:30 AM IST (Updated: 10 Jun 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தொகுதியை கருணாஸ் எம்.எல்.ஏ. ரிமோட் கண்ட்ரோலில் இயக்க நினைக்கிறார் என்று அமைச்சர் டாக்டர் மணிகண்டன் குற்றம்சாட்டினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் தங்கவேலு வரவேற்று பேசினார். விழாவில் பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:–  மாவட்ட நிர்வாகம் சட்டக்கல்லூரிக்கு தேவையான இடத்தினை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

இதனை ஏற்கனவே செய்திருந்தால் சட்டமன்ற கூட்ட தொடரில் சட்ட அமைச்சர் ரூ.70 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்திருப்பேன். இங்கு தகவல்தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இதற்கான 24 ஏக்கர் நிலத்தை உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இன்னும் ஏராளமான திட்டங்கள் வர உள்ளன. இதற்கு நிறைய இடம் தேவை உள்ளது. எனவே, அரசு நிலத்தினை யாருக்கும் குத்தகைக்கு தர வேண்டாம்.

மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி கிடைக்க போராடி வருகிறேன். விரைவில் கிடைக்க உள்ளது. இதற்கு தேவையான 100 ஏக்கர் நிலத்தினை மாவட்ட நிர்வாகம் தயாராக வைத்திருக்க வேண்டும். எந்த நேரமும் அதற்கான அனுமதி கிடைக்கலாம். மாவட்டத்திலேயே திருவாடானை தொகுதியில்தான் அதிக கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டுஉள்ளது. அதிகஅளவில் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுஉள்ளது. விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். சில சமூக விரோதிகள் காரங்காடு, முள்ளிமுனை பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க விடாமல் செய்கின்றனர். அதனை உடனடியாக சரிசெய்து தண்ணீர் கிடைக்க வழிவகை செய்துள்ளோம்.

திருவாடானை தொகுதிக்கு மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அனைத்து பணிகளையும் செய்து வருகிறேன். அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் தொகுதியை ரிமோட் கண்ட்ரோலில் இயக்க நினைக்கிறார். அரசு விழாக்களில் கலந்து கொள்வதில்லை. வந்தால்தான் யாருக்கு நலத்திட்டங்கள் கிடைக்கிறது, கிடைக்கவில்லை என்பது தெரியும். அதிகாரிகளுக்கு கூட உங்களை யார் என்றே தெரியாது. மக்களுக்கும் தெரியாமல் போய்விட்டது. உங்களின் முகத்தை பார்க்காமலே கட்சிக்காக மக்கள் வாக்களித்தனர்.

அவர்களுக்கு தேவையானதை நேரில் வந்து கேட்டு பெற்று செய்து கொடுக்க வேண்டியது உங்களின் கடமை. எனது கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடர்ந்து புகார் கூறிவருகிறார். அவர் அப்படி யாரிடமும் எந்த மனுவும் கொடுக்கவில்லை. மக்களுக்கு செய்ய வேண்டியதை நாங்கள் ஏன் தடுக்க போகிறோம். நீங்கள் உங்கள் தொகுதிக்கு செல்வதற்கு பயமாக இருந்தால் என்னிடம் கூறுங்கள் நான் கூட்டிக்கொண்டு போகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முடநீக்கியல் வல்லூனர் ஜெயசங்கர் நன்றி கூறினார்.


Next Story