ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் 3–வது நாளாக பலத்த சூறாவளி காற்று


ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் 3–வது நாளாக பலத்த சூறாவளி காற்று
x
தினத்தந்தி 10 Jun 2018 4:15 AM IST (Updated: 10 Jun 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் நேற்று 3–வது நாளாக பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம், தனுஷ்கோடி, எம்.ஆர்.சத்திரம், பாம்பன் உள்ளிட்ட ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. நேற்று 3–வது நாளாக ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

இந்த காற்றின் காரணமாக சாலைகளில் மணல் அள்ளி தூற்றுவதால் வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குஉள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டுனர்கள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் விபத்தை சந்திக்கின்றனர்.

செம்மமடம் பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது அந்த மரம் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து மரத்தை அப்புறப்படுத்தி மின்கம்பிகளை சரி செய்தனர். இதனால் ராமேசுவரம் பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த பயணிகள் ரெயில் பலத்த சூறாவளி காற்று காரணமாக நேற்று பிற்பகல் 3.15 மணி அளவில் மண்டபம் ரெயில் நிலையத்தை கடந்து வந்தபோது பாம்பன் பாலம் நுழைவு பகுதியில் நிறுத்தப்பட்டது. சுமார் 1¼ மணி நேரம் தாமதத்திற்கு பிறகு பாம்பன் பாலத்தில் மெதுவாக ஊர்ந்து சென்று ராமேசுவரத்தை அடைந்தது. தொடர்ந்து ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.


Next Story