சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி பிரசார இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு
சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி பிரசார இயக்கம் நடைபெறுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளது.
சிவகங்கை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் கந்தசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் சிறுபான்மை மக்கள், தலித்துகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரசார இயக்கம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், மாநிலக்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, பாலசுப்பிரமணி, மல்லிகா, மகேந்திரன், பாலா ஆகியோர் கொண்ட குழு கலந்துகொள்ள உள்ளது. காலை தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.