மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது: கல்லூரி பேராசிரியர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு


மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது: கல்லூரி பேராசிரியர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jun 2018 11:30 PM GMT (Updated: 9 Jun 2018 7:31 PM GMT)

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தேனியை சேர்ந்த வாலிபர்களிடம் ரூ.25 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த கோவையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். கல்லூரி பேராசிரியர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி,

தேனி கே.ஆர்.ஆர். நகர் 12-வது தெருவை சேர்ந்த போஸ் மகன் செல்வம் (வயது 39). இவர் வீட்டுமனைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். தொழில் சம்பந்தமாக அடிக்கடி சென்னைக்கு சென்று வருவது வழக்கம். அப்போது, சென்னை அருகே குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் விருதுநகரை சேர்ந்த ராஜன் மகன் சுரேஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தின் அடிப்படையில், செல்வம் தனது உறவினர் ஒருவரின் மகன் படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பதாக சுரேசிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட சுரேஷ், அரசு உயர் அதிகாரிகளிடம் நெருங்கிய பழக்கம் கொண்ட நபர் ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்று உதவி கேட்டால் மின்வாரியத்தில் வேலை வாங்கிக் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து சுரேசும், அவருடைய நண்பரான திண்டுக்கல்லை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரும் செல்வத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா ஓடந்துறை அருகில் உள்ள ஊமப்பாளையத்தை சேர்ந்த சலீம் (53) என்பவரிடம் அறிமுகம் செய்துள்ளனர்.

சலீம் தனக்கு அரசு அதிகாரிகளை தெரியும் என்றும், மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். ஒரு நபருக்கு வேலை வாங்கிக் கொடுக்க ரூ.20 லட்சம் பேசி, ரூ.5 லட்சம் முன்பணமாக கொடுக்குமாறு சலீம் கூறியுள்ளார். இதை நம்பிய செல்வம், தனது உறவினர் மகன்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் என 5 வாலிபர்களுக்கு வேலை வாங்கித்தர முன்பணமாக முதலில் ரூ.15 லட்சமும், பின்னர் ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.25 லட்சத்தை சலீம் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் கொடுத்ததாக தெரிகிறது. அதன் பிறகு அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செல்வம் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்து இந்த மோசடி தொடர்பாக சலீம், அவருடைய மனைவி சகிலா, மகள் ரோஸ்னா, மருமகன் மகுடீஸ்வரன், பேராசிரியர் சுரேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 6 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதில், சலீமை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட சலீம் கொத்தனார் வேலை செய்து வந்ததாகவும், பின்னர் தனக்கு சென்னையில் செல்வாக்கு இருப்பது போல் காட்டிக் கொண்டு மோசடி செய்ததும் தெரியவந்தது. மேலும் யாரிடமாவது இவர்கள் மோசடி செய்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story