வாகனம் மோதி 2 பெண் போலீசார் படுகாயம்


வாகனம் மோதி 2 பெண் போலீசார் படுகாயம்
x
தினத்தந்தி 10 Jun 2018 4:30 AM IST (Updated: 10 Jun 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே வாகனம் மோதி 2 பெண் போலீசார் படுகாயமடைந்தனர்.

பட்டிவீரன்பட்டி, 

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கற்பகம் (வயது 37). இவர் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். இதே ஊரை சேர்ந்தவர் பிரியா (34). இவர். நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். இவர்கள் இருவரும் தோழிகள்.

இவர்கள் வத்தலக்குண்டு அருகேயுள்ள பழைய வத்தலக் குண்டுவில் கோவில் திருவிழா பிரச்சினை காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பழைய வத்தலக்குண்டுவில் இருந்து அய்யம்பாளையத்துக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை கற்பகம் ஓட்டி வந்துள்ளார். பின்னால் பிரியா அமர்ந்து வந்துள்ளார். பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, பின்னால் வந்த வாகனம் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story