10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2018 4:15 AM IST (Updated: 10 Jun 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், ஜாக்டோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில், மாவட்ட தலைநகரங்களில் 9–ந் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்ட ஜாக்டோ அமைப்பு சார்பில் ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் து.சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.

தமிழ் ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அ.பாலகிருஷ்ணன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ப.சரவணன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் பி.சின்னதுரை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத கால நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஆசிரியர் கூட்டணி மாநில மகளிர் அணி செயலாளர் மார்க்ரெட் சில்வியா மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story