கோவில்பட்டியில் 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு நகராட்சி ஆணையாளர் தகவல்
கோவில்பட்டியில் 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையாளர் அச்சையா தெரிவித்து உள்ளார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையாளர் அச்சையா தெரிவித்து உள்ளார்.
கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
குடிநீர் திட்டம்கோவில்பட்டி நகராட்சி மூலம் தினமும் 60 லட்சம் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. தற்போது நகர பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் மக்கள்தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு, கோவில்பட்டி நகராட்சிக்கு தனியாக புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றை ஆதாரமாக கொண்டு, ரூ.81 கோடியே 82 லட்சம் நிதி மூலம் 4 குடிநீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டு, பிரதான குழாய் பதிக்கப்பட்டு, குடிநீரானது நகராட்சி பூங்கா நீரேற்று நிலையத்தில் உள்ள 9 லட்சத்து 65 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்சேகரிப்பு நிலையம் கொண்டு வரப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு உள்ள 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் தற்போது சீராக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் இந்த திட்டம் கடந்த மாதம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உரிய சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள காரணத்தால் குடிநீர் வினியோகத்துக்கான கால இடைவெளி வெகுவாக குறைக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு இந்த திட்டத்தின் வாயிலாக கூடுதலாக சராசரியாக 40 லட்சம் முதல் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க பெறுகிறது. எனவே பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி நிர்வாகம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள்மேலும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே குடிநீர் இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள் நகராட்சி மூலம் நிர்ணயிக்கப்பட்ட வைப்புத்தொகை மற்றும் பராமரிப்பு கட்டணம் செலுத்தப்பட்ட உடன் எந்தவித தாமதமும் இன்றி 3 நாட்களுக்குள் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.