சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி


சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 10 Jun 2018 2:30 AM IST (Updated: 10 Jun 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

சுரண்டை, 

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

கொத்தனார் 

நெல்லை மாவட்டம் சுரண்டை அழகாபுரிபட்டினத்தை சேர்ந்தவர் சந்திரன் மகன் அழகுமாரி (வயது 27) கொத்தனார். இவர் நேற்று மதியம் வீட்டில் சாப்பிடுவதற்காக வீரசிகாமணியில் இருந்து சுரண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

கடையாலுருட்டி அருகே சென்ற போது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அழகுமாரி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அழகுமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்த கண்ணன் (40) என்பவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுமாப்பிள்ளை 

விபத்தில் இறந்த அழகுமாரிக்கு உமா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. உமா தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story