மாவட்ட செய்திகள்

சர்வர் இணைப்பு கிடைக்காததால் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் மூடப்பட்டது + "||" + The e-service center was shut down in the office of Tanjai Thalintar because the server was not available

சர்வர் இணைப்பு கிடைக்காததால் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் மூடப்பட்டது

சர்வர் இணைப்பு கிடைக்காததால் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் மூடப்பட்டது
சர்வர் இணைப்பு கிடைக்காததால் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் மூடப்பட்டது. இதனால் சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்,

சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் பெறுவதற்கு முன்பெல்லாம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் வீண் அலைச்சல் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. அலுவலர்கள் இல்லை என்றால் அலுவலகத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் நேரம் வீணானது.


இவற்றை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, கூட்டுறவு சங்க அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல்துறை, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சை, திருவையாறு, திருவிடைமருதூர், பூதலூர் ஆகிய 9 தாசில்தார் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், கூட்டுறவு சங்க அலுவலகங்களில் 274 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் இ-சேவை மையங்கள் மூலமாகவே பெற்று கொள்ளலாம். மேலும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கும், குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கும் இந்த மையங்கள் மூலமாகவே விண்ணப்பம் செய்யலாம். இவைகள் அனைத்தும் இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து விசாரித்து அதன் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்வது, அவற்றின் மீதான நடவடிக்கை ஆகியவற்றை குறுந்தகவல் மூலமாக செல்போன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். சான்றிதழ் தயாரான தகவல் பெறப்பட்டதும், சம்பந்தப்பட்ட இ-சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம். இ-சேவை மையங்கள் வழியாக சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை வந்தபிறகு கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்லும் வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த மையங்கள் மூலம் சான்றிதழ் பெறுவது மிக எளிதாகவே இருந்தது. இதனால் இ-சேவை மையங்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் தற்போது பள்ளிக்கூடம் திறந்துவிட்டதால் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்காக வழக்கத்தை காட்டியிலும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 5 நாட்களாக இ-சேவை மையங்களில் சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவும் முடியவில்லை. சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து பொதுமக்களுக்கு வழங்கவும் முடியவில்லை.

தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்ட இ-சேவை மையத்தில் சர்வர் இணைப்பு கிடைக்காததால் நேற்று மையத்தை ஊழியர்கள் பூட்டிவிட்டனர். இதனால் சான்றிதழ் பெறுவதற்காகவும், பதிவு செய்வதற்காகவும் வந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

தொடக்கத்தில் இ-சேவை மையங்களில் சாதி சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சில சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 15-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் தற்போது 30-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இ-சேவை மையங்களின் சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை.

வழக்கமாக 50 விண்ணப்பங்கள் வரை பதிவேற்றம் செய்த நிலையில் நேற்றுமுன்தினம் 5 விண்ணப்பங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிந்தது. இதனால் மையங்களுக்கு சான்றிதழ் பெற வந்த பொதுமக்கள், மாணவர்கள் பல மணிநேரம் காத்திருந்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றோம். இன்றைக்கு(நேற்று) மையத்தையே பூட்டிவிட்டனர். சர்வர் இணைப்பு கிடைக்காத பிரச்சினை 5 நாட்களாக நீடித்து வருகிறது. ஆனால் அவற்றை சரி செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். தினமும் எந்த வேலைக்கும் செல்லாமல் மையத்திற்கு அலைவது தான் வேலையாக உள்ளது. வீண் அலைச்சலை போக்குவதற்கு தான் இ-சேவை மையம் தொடங்கப்பட்டது. இப்போது இங்கேயும் சான்றிதழ் பெற அலைய வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனே சர்வர் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, சர்வர் இணைப்பு கிடைக்காததால் 5 நாட்களாக பெரும் பிரச்சினையாக தான் உள்ளது. காலையில் 9 மணி அளவில் இணைப்பு கிடைக்கிறது. 10 மணிக்கு மேல் இணைப்பு கிடைப்பது இல்லை. பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருந்துவிட்டு திரும்பி செல்லும் சம்பவம் நடக்கிறது. நேற்று பல இடங்களில் சர்வர் இணைப்பு பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. நாளைக்குள்(திங்கட்கிழமை) இந்த பிரச்சினை தீரும் என்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. குறைந்த அளவு வாக்காளர்கள் இருக்கும் இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை
குறைந்த அளவு வாக்காளர்கள் இருக்கும் இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்வையாளர் ஆனந்ராவ் விஷ்ணுபட்டீல் கூறினார்.