கருப்பூர் அரசு கல்லூரியில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கு, 2-வது நாளில் 800 மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு


கருப்பூர் அரசு கல்லூரியில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கு, 2-வது நாளில் 800 மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 9 Jun 2018 8:23 PM GMT (Updated: 9 Jun 2018 8:23 PM GMT)

என்ஜினீயரிங் சேர்க்கைக்கு நேற்று 2-வது நாளில் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 800 மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

கருப்பூர்,

தமிழகத்தில் உள்ள 509 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடத்துகிறது. என்ஜினீயரிங் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அரசு நியமித்த 42 உதவி மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறுகிறது.

800 மாணவ, மாணவிகள்

இந்த மையத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10,296 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் 830 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிப்புகளின் மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

நேற்று 2-வது நாளாக, 800 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இதுகுறித்து கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் விமலா ரோஸ்லின் கூறும்போது, ‘சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 2 இடங்களில் வைத்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாளில் வரமுடியாமல் போன மாணவ, மாணவிகள் வருகிற 14-ந் தேதி மதியம் 2 மணிக்கு மேல் கல்லூரிக்கு வந்து தங்களுடைய சான்றிதழை சரிபார்த்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது‘ என்றார். 

Next Story